செய்திகள்

ஜூன் 4-ந்தேதி ஜிப்மர் நுழைவு தேர்வு: 27-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

Published On 2017-03-03 05:47 GMT   |   Update On 2017-03-03 05:47 GMT
இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் அனுப்புவது வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும்.
புதுச்சேரி:

புதுவையில் மத்திய அரசுக்கு சொந்தமான ஜிப்மர் மருத்துவ கல்லூரி உள்ளது. இங்கு 200 எம்.பி.பி.எஸ். படிப்புக்கான இடங்கள் உள்ளன. இவற்றை நிரப்ப தனியாக அகில இந்திய அளவில் நுழைவு தேர்வு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு வருகிற ஜூன் மாதம் 4-ந்தேதி நடைபெறுகிறது.

நாடு முழுவதும் 75 நகரங்களில் தேர்வு நடைபெறும். புதுவை மற்றும் தமிழ்நாட்டில் சென்னை, கோவை, நாகர்கோவில், திருச்சி, தூத்துக்குடி, நெய்வேலி, நாமக்கல் ஆகிய இடங்களிலும் தேர்வு நடைபெறும்.

இதற்கான விண்ணப்பம் அனுப்புவது வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது. ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க முடியும். இதற்காக www.jipmer.edu.in என்ற இணையதளத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும். மே 3-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.


மொத்தம் உள்ள 200 இடங்களில் புதுவை ஜிப்மர் மருத்துவ கல்லூரியில் 150 இடங்களும், காரைக்கால் மருத்துவ கல்லூரியில் 50 இடங்களும் உள்ளன.

புதுவையில் உள்ள 150 இடங்களில் 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்படும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடுகள் ஆகும்.

காரைக்காலில் உள்ள 50 இடங்களில் புதுவை மாநிலத்துக்கு 14 இடங்களும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடாகவும் இருக்கும்.

நுழைவு தேர்வுக்கு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த கட்டண விகிதம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். நெட் பேங்க், கிரிடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாகவே கட்டணத்தை செலுத்த முடியும். மாற்று திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

Similar News