செய்திகள்

எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடக்கவில்லை: பா.ம.க. குற்றச்சாட்டு

Published On 2017-03-01 15:07 GMT   |   Update On 2017-03-01 15:07 GMT
எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பதால் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வில்லை என்று புதுவை பா.ம.க. செயலாளர் கோபி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி:

புதுவை பா.ம.க. செயலாளர் கோபி விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் 38 ஆண்டுகளுக்கு பிறகு 2007-ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது. அதன் மூலம் வார்டு உறுப்பினர்கள், கவுன்சிலர்கள், பஞ்சாயத்து தலைவர்கள், நகராட்சி தலைவர்கள் பதவிகள் நிரப்பப்பட்டு மக்கள் நல பணிகள் துரிதமாக செயல்பட்டு வந்தது.

ஆனால், பதவி காலம் முடிந்து மீண்டும் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வருகிறது. இதனால் மத்திய அரசால் புதுவைக்கு கிடைக்க வேண்டிய சுமார் 400 கோடி ரூபாய் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் எம்.எல்.ஏ.க் களின் அதிகாரங்கள் கவுன்சிலர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதால் எம்.எல்.ஏ. அதிகாரம் குறைக்கப்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு எம்.எல்.ஏ.க்கள் மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து வருவதாக தெரிகிறது. இதன் காரணமாகவே கடந்த என்.ஆர். காங்கிரஸ் அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்த முன்வரவில்லை.

தற்போது பொறுப்பேற்றுள்ள முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு உள்ளாட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால், ஸ்மார்ட் சிட்டி திட்டம் புதுவைக்கு கொண்டு வரப்படும் நிலையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தினால் மட்டுமே புதுவை மாநிலம் ஸ்மார்ட் சிட்டி திட்டம் மத்திய அரசின் 3-வது பட்டியலில் இடம் பெற முடியும் என்ற நிலை உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News