செய்திகள்

பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் போலீஸ் வாகனத்தை வழிமறித்து தாக்கி கைதி சரமாரி வெட்டிக்கொலை

Published On 2017-02-24 10:34 GMT   |   Update On 2017-02-24 10:34 GMT
பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கைதியை 15 பேர் கொண்ட கும்பல் வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை:

தூத்துக்குடி மாவட்டம் பழையகாயல் அருகே உள்ள புல்லாவெளியை சேர்ந்தவர் சிங்காரம் என்ற சிங்காரவேலன் (வயது 42). இவர் தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவனத் தலைவர் பசுபதி பாண்டியனின் தீவிர ஆதரவாளர் ஆவார்.

சிங்காரம் மீது சுத்தமல்லியை சேர்ந்த பிரபல ரவுடி மதன் கொலை வழக்கு, பழைய காயலில் நடந்த சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் 2 பேர் கொலை வழக்கு, ஏரலில் நடந்த ஒரு கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு கொலை வழக்கு மற்றும் அடிதடி, கொலை மிரட்டல் வழக்குகள் உள்ளன.

போலீசாரால் கைது செய்யப்பட்டிருந்த சிங்காரம் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை ஒரு வழக்கில் தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்காக இன்று காலை தூத்துக்குடி ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் வீரபாகு தலைமையில் போலீஸ்காரர்கள் பிரதாப், பாலசுப்பிரமணி உள்பட 4 பேர் போலீஸ் ஜீப்பில் இன்று நெல்லைக்கு வந்தனர்.

அவர்கள் சிறையில் இருந்த சிங்காரத்தை போலீஸ் ஜீப்பில் ஏற்றிக் கொண்டு காலை 10 மணிக்கு தூத்துக்குடி நோக்கி புறப்பட்டனர். போலீஸ் வாகனம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் நான்கு வழிச்சாலையில் உள்ள சோதனை சாவடியை கடக்க முயன்றபோது சாலையின் இருபுறமும் பதுங்கி இருந்த 15 பேர் கொண்ட கும்பல் திடீரென போலீஸ் ஜீப்பை நோக்கி ஓடி வந்தது. அந்த கும்பலில் அனைவரும் அரிவாள், உருட்டுகட்டை உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்திருந்தனர்.


இதனைப் பார்த்த போலீஸ் வாகன டிரைவர் வாகனத்தின் வேகத்தை குறைத்தார். அப்போது அந்த கும்பல் ஜீப்பின் கண்ணாடிகளை அடித்து நொருக்கியது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார் அந்த கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது அந்த கும்பல் போலீசார் மீது மிளகாய் பொடி கலந்த தண்ணீரை ஊற்றி, உருட்டுக்கட்டையால் தாக்கியது. மேலும் போலீஸ்காரர் ஒருவர் வைத்திருந்த துப்பாக்கியை அடித்து உடைத்தது.

இந்த திடீர் தாக்குதலாலும், மிளகாய் பொடி கலந்த தண்ணீர் ஊற்றப்பட்டதாலும் போலீசார் நிலைகுலைந்தனர். அதனை பயன்படுத்திக் கொண்ட கும்பல், ஜீப்பின் உள்ளே இருந்த சிங்காரத்தை சரிமாரியாக அரிவாளால் வெட்டினர். பின்பு சர்வீஸ் ரோட்டில் தயாராக நின்ற 2 கார்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர். மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில தலை, கை, கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக்காயங்களுடன் சிங்காரம் உயிருக்கு போராடினார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாளை போலீசார் அங்கு விரைந்து வந்து சிங்காரம் மற்றும் காயம் அடைந்த சப்- இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீஸ்காரர்களை மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த சிங்காரம் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிங்காரம் சிறிது நேரத்தில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார்.

கைதி மீது கொலை வெறி தாக்குதல் நடந்த இடத்தை நெல்லை மாநகர போலீஸ் கமி‌ஷனர் திருஞானம், துணை கமி‌ஷனர் பிரதீப்குமார், உதவி கமி‌ஷனர் விஜயகுமார், இன்ஸ்பெக்டர் திருப்பதி ஆகியோர் விரைந்து வந்து பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.


கைதியை வெட்டி கொலை செய்த கும்பலை பிடிக்க போலீஸ் கமி‌ஷனர் திருஞானம் உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். நெல்லை- தூத்துக்குடி மாவட்ட சோதனை சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது. இந்த கொலை சம்பவம் பழிக்குப்பழியாக நடந்ததா? என பாளை போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு வந்து சிங்காரத்தின் உடலை பார்வையிட்டார். மேலும் அவர் காயம் அடைந்த போலீசாரையும் சந்தித்து பேசினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Similar News