செய்திகள்

நிறைவேறாமல் போன ஜெயலலிதாவின் கடைசி ஆசை

Published On 2017-02-24 08:43 GMT   |   Update On 2017-02-24 08:43 GMT
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் மறைவுக்கு பின்னர் இன்று அவர் இல்லாமல் அவரது முதல் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் நிறைவேறாமல் போன அவரது கடைசி ஆசை என்ன என்று தெரிந்து கொள்வோமா?
சென்னை:

தமிழக முன்னாள்  முதலமைச்சர் ஜெயலிதாவின் மறைவுக்கு பின்னர் இன்று அவர் இல்லாமல் அவரது முதல் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் நிறைவேறாமல் போன அவரது கடைசி ஆசை என்ன என்று தெரிந்து கொள்வோமா?

கலைத்துறையில் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து, பின்னர், மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் பொதுவாழ்வுக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர் ஜெயலலிதா. ஆரம்பத்தில் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தின்போது, அ.தி.மு.க.வின் கொள்கை பரப்பு செயலாளராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கலைச்செல்வி ஜெயலலிதா, தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் சத்துணவு திட்டக்குழுவின் உறுப்பினராகவும், பின்னர், அ.தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினராகவும் மெல்ல, மெல்ல உயரத் தொடங்கினார்.

எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பின்னர், இரண்டாக பிளவுப்பட்டிருந்த அ.தி.மு.க.வை மீண்டும் ஒருமுகப்படுத்தி, முடக்கி வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் வெற்றிச் சின்னமான இரட்டை இலையையும் மீட்டார்.

பின்னாளில், சட்டசபை உறுப்பினராகவும், பின்னர் ஆறுமுறை தமிழக முதலமைச்சராகவும் விளங்கிய ஜெயலலிதா, நடிப்பு மற்றும் அரசியல் ஆகியவற்றில் காட்டிய ஆர்வத்தைவிட புத்தகங்களை படிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வந்தார் என்பது பலருக்கும் தெரியும்.


ஆனால், தனது ஓய்வு காலத்தை எப்படி கழிக்க வேண்டும் என்று அவரது மனதுக்குள் நெடுநாளாக குடிகொண்டிருந்த ஒரு ஆசை நிறைவேறாமல், உயிரிழக்க நேரிடும் என அவர் கனவிலும் எண்ணியிருக்க மாட்டார் என்று தற்போது நினைக்க தோன்றுகிறது.

கலையுலகத்திற்குள் நுழையாமல் இருந்திருந்தால் நீங்கள் என்னவாக உருவாக திட்டமிட்டு இருந்தீர்கள்? என்று பல தனிப்பட்ட பேட்டிகளின்போது பதிலளித்த ஜெயலலிதா, வழக்கறிஞராக தொழில் செய்ய விரும்பினேன் என்று முன்னர் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நடிப்பிலும், தற்போது அரசியலிலும் முழுநேரம் பிசியாக இருக்கும் நீங்கள் ஓய்வுக் காலத்தை எப்படி கழிக்க வேண்டும்? என்று ஏதாவது திட்டமிட்டு இருப்பீர்களே..? என்ற கேள்விக்கு சில ஆங்கில ஊடகங்களுக்கு பதிலளித்த அவர், ஒரு விவசாயியாக எனது இறுதிக் காலத்தை கழிக்க விரும்புகிறேன்.

எனக்கு ஐதராபாத்தில் சொந்தமாக ஒரு திராட்சை தோட்டம் உள்ளது. அங்கு சென்று தோட்டத்தை மேற்பார்வை செய்து, பண்ணை தொழில் செய்து வாழ விருப்பம். அப்போது, எனக்கு கோப்புகளை பார்க்க வேண்டிய அவசியமோ, பார்வையாளர்களை சந்திக்க வேண்டிய அவசியமோ  இருக்காது. தொலைபேசி அழைப்புகளுக்கும் பதில் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயம் இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.


மகிழ்ச்சியை எந்த அளவுக்கோலை வைத்து மதிப்பிடுகிறீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், மகிழ்ச்சியை அளப்பதற்கு வழிகள் ஏதும் இருப்பதாக நான் கருதவில்லை. 'கர்மா' எனும் விதிப்பலனை நான் மிகவும் நம்புகிறேன்.
நாம் பிறந்தது மகிழ்ச்சியாக இருப்பதற்கும், உல்லாசமாக வாழ்வதற்கும் என்று நான் நம்பவில்லை.

முந்தைய கர்மவினைப் பலனால் தான் ஒவ்வொருவரும் பூமியில் பிறக்கிறோம். மேலும், ஒவ்வொருவரும் உலகத்தில் நிறைவேற்ற வேண்டிய காரியம் என்று ஒன்று உள்ளது. ஒருவேளை, அவனோ-அவளோ அதைப்பற்றி அறிந்திருக்க முடியாது.

எனது நம்பிக்கையின்படி, மகிழ்ச்சியை அடைவதற்கு ஒருவர் மோட்சத்தை அடையவேண்டும். அதாவது மறுபிறவி என்பதே கூடாது என்கிற மோட்சதை அடைய வேண்டும் என்றும் தனது ஆசையையும் அவர் பதிவிட்டுள்ளார்.

Similar News