செய்திகள்

பன்னீர்செல்வம் அணியுடன் தீபா இணையாதது ஏன்?

Published On 2017-02-24 07:43 GMT   |   Update On 2017-02-24 07:43 GMT
ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட தீபா தயங்குவது ஏன் என்பது பற்றி தீபா ஆதரவாளர்கள் சில தகவல்களை தெரிவித்தனர்.
சென்னை:

அ.தி.மு.க.வில் இருந்து பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

அவர் அணியில் 11 எம்.எல்.ஏ.க்கள், 10 எம்.பி.க்கள் உள்ளனர். இந்த நிலையில் அதிரடி திருப்பமாக ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வமும், தீபாவும் கை கோர்த்தனர்.

ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு தீபா நேரில் சென்றார். அவரை பன்னீர்செல்வத்தின் மனைவி ஜெயலட்சுமி ஆரத்தி எடுத்து வரவேற்றார்.

இதையடுத்து பன்னீர் செல்வமும் தீபாவும் இணைந்து அரசியலில் புதிய எழுச்சியை உருவாக்குவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஓ.பன்னீர் செல்வம் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்ல திட்டமிட்டுள்ளார்.

அந்த சுற்றுப்பயணத்தில் தீபாவும் கலந்து கொள்வார் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் தீபா அடுத்த கட்டமாக பன்னீர்செல்வம் அணியுடன் சேர்ந்து செயல்படவில்லை.

மாறாக இன்று அவர் தனது பெயரில் ஜெ.தீபா பேரவையை தொடங்கியுள்ளார். ஓ.பன்னீர்செல்வத்துடன் இணைந்து தீவிர அரசியலில் ஈடுபட அவர் தயங்குவது ஏன் என்பது பற்றி தீபா ஆதரவாளர்கள் சில தகவல்களை தெரிவித்தனர்.

தீபாவின் நோக்கம் எம்.ஜி.ஆர். தொடங்கி ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க. என்ற மாபெரும் இயக்கத்தை பாதுகாக்க வேண்டும் என்பதுதான். ஆனால் தற்போது ஒரு குடும்பத்தின் பிடியில் அ.தி.மு.க. சிக்கி உள்ளது.


எடுத்த எடுப்பிலேயே அந்த கட்சியைக் கைப்பற்றுவதோ அல்லது வேறு நடவடிக்கைகளில் ஈடுபடுவதோ இயலாத காரியம். காரணம் பெரும்பாலான நிர்வாகிகள் அந்த குடும்பத்தின் பக்கமும் சில நிர்வாகிகள் ஓ.பன்னீர் செல்வம் அணியிலும் இருக்கிறார்கள்.

முதலில் தீபாவை நம்பி வரும் தொண்டர்களை அமைப்பு ரீதியாக ஒன்றிணைக்க பேரவையைத் தொடங்கியுள்ளார். இது அரசியல் கட்சி அல்ல. அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா குடும்பத்தினர் 126 பேரை தவிர அனைவரும் வர வேண்டும் என்று தீபா அழைப்பு விடுப்பார்.

கட்சியைப் பொறுத்தவரை தீபா பொதுச்செயலாளராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். ஓ.பன்னீர்செல்வம் சிறந்த நிர்வாகி, துணிச்சலாக முடிவு எடுப்பவர்.

அதற்காக தீபா நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். அரசியல் கட்சி என்று வரும்போது பொதுச்செயலாளர் பதவி வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம்.

அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளார். ஆனால் அவருடன் இருப்பவர்கள் இன்னமும் முழு சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் இதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வெளியிடும் விளம்பர படங்களில் தீபா படமும் இடம் பெறுகிறது. ஆனால் இன்னும் முறையான உடன்பாடு ஏற்படாததால் தீபா ஆதரவாளர்கள் ஓ.பன்னீர்செல்வம் படத்தை சேர்த்து அச்சிடுவதை தவிர்த்து வருகிறார்கள்.

Similar News