செய்திகள்

ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் படங்களை வெளியிடவில்லை: அப்பல்லோ பதில் மனு தாக்கல்

Published On 2017-02-23 08:10 GMT   |   Update On 2017-02-23 08:10 GMT
ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் அவர் சிகிச்சை பெறும்போது படங்களை வெளியிடவில்லை என அப்பல்லோ மருத்துவமனை சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ஐகோர்ட்டில், அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் என்பவர் பொது நல வழக்கை தாக்கல் செய்தார்.

அதில், தமிழக முதல்- அமைச்சராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ந்தேதி மர்மமான முறையில் இறந்துள்ளார். அவரது சாவில் பல சந்தேகங்கள் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் 3 பேர் தலைமையில் ஒரு குழுவை அமைக்கவேண்டும்’ என்று கூறியிருந்தார்.

அதேபோல, நாகை மாவட்டத்தை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் ஞான சேகரன், டிராபிக் ராமசாமி ஆகியோரும் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தொடர்ந்த வழக்கை முன்பு நீதிபதிகள் வைத்திய நாதன், பார்த்திபன் ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதி வைத்தியநாதன், ‘ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் எனக்கு பல சந்தேகங்கள் உள்ளன. அவரது உடலை தோண்டி வெளியில் எடுத்து பரிசோதித்தால் தான் உண்மைகள் எல்லாம் வெளியில் வருமா?’ என்று கேள்வி எழுப்பினார். நீதிபதியின் இந்த கருத்து நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்த நிலையில், இந்த வழக்கு ஐகோர்ட்டில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, ‘அ.தி.மு.க. தொண்டர் ஜோசப் தாக்கல் செய்த வழக்கிற்கு, பிரதமர் அலுவலக முதன்மை செயலாளர், மத்திய உள்துறை செயலாளர், தமிழக தலைமை செயலாளர், உள்துறை செயலாளர், சி.பி.ஐ. இயக்குனர் உள்ளிட்டோர் தனித்தனியாக பதில் மனுக்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு தலைமை நீதிபதி (பொறுப்பு) ஹூலுவாடி ரமேஷ், நீதிபதி மகாதேவன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய மத்திய அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் 2 வார கால அவகாசம் வழங்கினார்.

இதையடுத்து அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் சார்பில் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-


ஜெயலலிதா எங்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றபோது, தன்னுடைய புகைப்படத்தை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.

அவர் விரும்பாததால், சிகிச்சை பெறுவது போன்ற புகைப்படம், வீடியோ காட்சிகளை நாங்கள் வெளியிடவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிகளின்படி, ஒரு நபரின் சிகிச்சை தொடர்பான விவரங்களை வெளியிடக் கூடாது.

இந்த காரணங்களால் ஜெயலலிதா சிகிச்சை பெறுவது தொடர்பான புகைப்படங்களையும், வீடியோ காட்சிகளையும் நாங்கள் வெளியிடவில்லை. அதேநேரம், ஜெயலலிதாவின் உடல் நிலை, சிகிச்சை தொடர்பான சில விவரங்கள் உள்ளிட்டவை குறித்து பத்திரிகைகளுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகம் அறிவிக்கை வெளியிட்டது.

இந்த அறிக்கைகள் அனைத்தும், ஜெயலலிதாவின் ஒப்புதல் பெற்ற பின்னரே வெளியிடப்பட்டது. ஜெயலலிதாவுக்கு முறையான மருத்துவ சிகிச்சை அனைத்தும் முறைப்படி வழங்கப்பட்டன. அது தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யும்படி இந்த ஐகோர்ட்டு உத்தரவிட்டால், அவற்றை தாக்கல் செய்ய தயாராக உள்ளோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

அதேபோல, தமிழக அரசு தரப்பிலும் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், ‘ஜெயலலிதாவுக்கு முறையான உரிய சிகிச்சை தான் வழங்கப்பட்டன. இதில் எந்த ஒளிவும் மறைவும் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது.

இந்த இரு பதில் மனுக்களையும் நீதிபதிகள் படித்து பார்த்தனர்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், ‘ஜெயலலிதா மரணம் குறித்த எங்களது சந்தேகங்கள் குறித்து தமிழக அரசும், அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகமும் விளக்கம் அளிக்கவே இல்லை. ஜெயலலிதாவுக்கு முறையான சிகிச்சை வழங்கப்பட்டது என்று மட்டும் தமிழக அரசு கூறுகிறது. அதுவும் அப்பல்லோ ஆஸ்பத்திரி நிர்வாகம் தாக்கல் செய்த பதில் மனுவின் விவரங்களின் அடிப்படையில், தமிழக அரசும் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே, ஜெயலலிதா மரணம் தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தர விட வேண்டும்’ என்று வாதிட்டார்.

இதற்கு அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் எதிர்ப்பு தெரிவித்து வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார்கள்.

Similar News