செய்திகள்

விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு

Published On 2017-02-21 10:43 GMT   |   Update On 2017-02-21 10:43 GMT
விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சி.வி.சண்முகம் வீடு மற்றும் அலுவலகத்துக்குதிற்கு கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
விழுப்புரம்:

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் கலந்து கொள்வதற்காக சென்னை அருகே கூவத்தூரில் உள்ள சொகுசு விடுதியில் சசிகலா ஆதரவு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருந்தனர்.

கடந்த 18-ந் தேதி தமிழக சட்டசபையில் நடந்த வாக்கெடுப்பில் பங்கேற்று சசிகலா அணி எம்.எல்.ஏ.க்கள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தனர். இதனால் எம்.எல்.ஏ.க்கள் மீது தொகுதி மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

எனவே தொகுதி பக்கம் செல்ல வேண்டுமானால் தங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி சசிகலா அணியை சேர்ந்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் விழுப்புரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான சி.வி.சண்முகம் வீடு மற்றும் அலுவலகத்துக்குதிற்கு ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தற்போது கூடுதலாக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அ.தி.மு.க. அலுவலகம் முன்பும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதேபோல் உளுந்தூர்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. குமரகுரு, கள்ளக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. பிரபு, வானூர் தொகுதி எம்.எல்.ஏ. சக்கரபாணி ஆகியோரின் வீடு, அலுவலகங்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Similar News