செய்திகள்

தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இல்லை- சசிகலா ஆட்சி நடக்கிறது: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி

Published On 2017-02-19 10:05 GMT   |   Update On 2017-02-19 10:05 GMT
தமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி இல்லை, சசிகலா ஆட்சி நடக்கிறது என்று முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

சென்னை:

சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறியதாவது:-

தர்மம் வெல்வதற்கு மீண்டும் கால அவகாசம் உள்ளது. உறுதியாக சொல்லுகிறேன். இறுதியில் தர்மமே வெல்லும்.

15 நாட்கள் அடைக்கப்பட்டிருந்த எம்.எல்.ஏக்களை தொகுதிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும், ஒரு வாரம் கழித்து மீண்டும் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் சட்ட சபையில் வலியுறுத்தினோம். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றோம். இதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளவில்லை.

சட்டசபை கூட்டத்தில் இதே கருத்தை வலியுறுத்திய தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பலவந்தமாக காயப்படுத்தி, ஜனநாயக மரபுகளை மீறி அவர்களை வெளியேற்றி தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லுபடி ஆகுமா ஆகாதா என்ற தீர்ப்பு மக்களிடமே விடப்படுகிறது.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா யாரை கட்சியில் இருந்தும், தன் வீட்டில் இருந்தும் ஒதுக்கி வைத்தாரோ, தான் உயிரோடு இருக்கும் வரை யாரை அனுமதிக்கவில்லையோ அவர்களின் ஆட்சிதான் நடை பெறுகிறது. ஜெயலலிதாவின் ஆட்சி இல்லை. சசிகலாவின் ஆட்சிதான் நடக்கிறது. மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி உறுதியாக ஏற்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News