செய்திகள்

தமிழகத்தை காப்பாற்ற எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும்: தமிழருவி மணியன் அறிக்கை

Published On 2017-02-17 08:14 GMT   |   Update On 2017-02-17 08:14 GMT
தமிழகத்தை காப்பாற்ற எடப்பாடிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சென்னை:

காந்திய மக்கள் இயக்கம் தலைவர் தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

எடப்பாடி பழனிச்சாமியின் அமைச்சரவைக்கு பின்னால் இயக்கி வைக்கும் சக்தியாக மன்னார்குடி குடும்பம் இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

அ.தி.மு.க.வின் சட்டப் பேரவை உறுப்பினர்களாக இவர்கள் உள்ள நிலையில் கவர்னருக்கு எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து பதவிப் பிரமாணம் செய்து வைப்பதை தவிர வேறு வழியில்லை.

கவர்னர், அரசியல் அமைப்புச் சட்டப்படி தனக்குரிய கடமையைச் சரிவர செய்து விட்டார். இனி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் சமூகக் கடமையை சரியாக செய்து முடிக்க வேண்டும்.

இந்த பினாமி ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க தி.மு.க., காங்கிரஸ், பன்னீர்செல்வம் ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பேதங்களை கடந்து எடப்பாடி அமைச்சரவைக்கு எதிராக வாக்களித்து தமிழகத்தைக் காப்பாற்ற வேண்டும்.

இதை செய்யத் தவறினால் அரசியல் நேர்மை குறித்தும் ஊழலற்ற பொதுவாழ்வு குறித்தும் பேசுவதற்கான தகுதி எந்த கட்சிக்கும் இருக்கப் போவதில்லை.

தேர்தல் நேரத்தில் மாணவர்களையும், இளைஞர்களையும் ஆரோக்கியமான அரசியலை விரும்பும் பொதுமக்களையும் இவர்கள் சந்தித்துதான் ஆக வேண்டும். இன்று தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை இவர்கள் அன்று பெறப்போவது நிச்சயம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News