செய்திகள்

புதுவையில் மீட்டர் முறை ஆட்டோ கட்டணம் குறைந்தபட்சமாக ரூ.35 நிர்ணயம்

Published On 2017-02-15 08:52 GMT   |   Update On 2017-02-15 08:52 GMT
புதுவையில் மீட்டர் முறை கட்டணம் இன்று முறைப்படி அமலுக்கு வந்தது. இதனால் இன்று முதல் ஆட்டோவுக்கான குறைந்த பட்ச கட்டணம் 35 ரூபாய் என நடைமுறைக்கு வந்துள்ளது.

புதுச்சேரி:

புதுவையில் இயக்கப்படும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கான புதிய கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்து கடந்த ஆண்டு டிசம்பரில் அரசாணை வெளியிட்டது. அதன்படி, ஆட்டோக்களுக்கான புதிய கட்டண விகிதங்கள் அறிவிக்கப்பட்டது.

புதிதாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆட்டோ கட்டண விபரம்:

காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை முதல் 1.8 கி.மீ தூரத்துக்கு ரூ.35-ம், கூடுதல் ஒவ்வொரு கி.மீ.க்கும் ரூ.18-ம், காத்திருப்பு கட்டணமாக (ஒவ்வொரு 5 நிமிடத்துக்கும்) ரூ.5-ம் நிர்ணயிக்கப்பட்டது.

இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை பகல் நேர சேவை கட்டணத்துடன் 50 சதவீதம் கூடுதலாக செலுத்த வேண்டும்.

முன்கட்டண ஆட்டோ சேவையும் அறிமுகப்படுத்தப்பட்டது. மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் முன் கட்டண ஆட்டோ சேவை மையங்கள் தொடங்கப்படும் என்றும், முன்கட்டண சேவைக்கு 20 சதவீதம் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து புதிய ஆட்டோ கட்டண முறையை அமல்படுத்த அனைத்து ஆட்டோ டிரைவர்களும் தங்களுடைய ஆட்டோ கட்டண மீட்டரை 2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதிக்குள் (இன்று) சரிசெய்து கொள்ள வேண்டும் என்றும் கெடு கொடுக்கப்பட்டது.

அந்த கெடு தற்போது முடிவடைந்துள்ளதால், புதுவையில் மீட்டர் முறை கட்டணம் இன்று முறைப்படி அமலுக்கு வந்தது. இதனால் இன்று முதல் ஆட்டோவுக்கான குறைந்த பட்ச கட்டணம் 35 ரூபாய் என நடைமுறைக்கு வந்துள்ளது.

Similar News