செய்திகள்

எண்ணூர் கடல் பகுதியில் எண்ணெய் படலம் அகற்றும் பணி முடிந்தது

Published On 2017-02-09 09:53 GMT   |   Update On 2017-02-09 09:53 GMT
எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 27-ந்தேதி 2 கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானதில் கடலில் கொட்டிய பல லட்சம் லிட்டர் டீசலை அகற்றும் பணி முடிந்தது.
திருவொற்றியூர்:

எண்ணூர் துறைமுகம் அருகே கடந்த 27-ந்தேதி 2 கப்பல்கள் மோதி விபத்துக்குள்ளானது. இதில் ‘டான்’ காஞ்சீபுரம் கப்பலில் இருந்த டீசல் கடலில் கொட்டியது. பல லட்சம் லிட்டர் டீசல் வெளியேறியதால் திருவான்மியூர் கடற்கரை வரை எண்ணெய் படலம் பரவியது.

இதில் தாழ்வான பகுதியான எண்ணூர், பாரதியார் நகர் கடற்கரையில் அதிக அளவு எண்ணெய் படலம் கரை ஒதுங்கியது. இதனால் ஏராளமான ஆமைகள் இறந்தன. மீனவர்கள் கடலுக்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து எண்ணூர் கடற்கரையில் பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி தொடங்கியது. இதில் கடலோர காவல் படையினர் துறைமுக ஊழியர்கள், தன்னார்வலர்கள், பொதுப் பணித்துறையினர் உள்ளிட்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியாளர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர்.

சுமார் 200 மெட்ரிக் டன் எண்ணெய் படலம் அகற்றப்பட்டது. இதனால் கடற்கரை பகுதியில் எண்ணெய் படலம் குறைந்து காணப்படுகிறது.

நேற்று மாலை சுற்றுச்சூழல் துறை முதன்மை செயலாளர் அதுல்யமிஸ்ரா மற்றும் அதிகாரிகள் எண்ணெய் படலம் பரவிய எண்ணூர் கடற்கரையை பார்வையிட்டனர். பின்னர் எண்ணூர் துறைமுகத்தில் ஆலோசனை கூட்டம் நடை பெற்றது.

இதற்கிடையே இன்று காலை எண்ணூர் கடற்கரையில் மிகவும் குறைவான பணியாளர்கள் எண்ணெய் படலத்தை அகற்றினர். கரையோரத்தில் ஒதுங்கிய எண்ணெயை ‘ஸ்குரூப் பைப்’ மூலம் உறிஞ்சி எடுத்தனர்.

இதுகுறித்து ஆர்.டிஓ. வீரப்பனிடம் கேட்டபோது, “கடலில் பரவிய எண்ணெய் படலத்தை அகற்றும் பணி இன்றுடன் முடிவடைகிறது. எண்ணெயால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மீனவர்கள், பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்” என்றார்.

Similar News