செய்திகள்

முட்டைகளில் இருந்து வெளிவந்த 85 ஆமை குஞ்சுகள் தனுஷ்கோடி கடலில் விடப்பட்டன

Published On 2017-02-06 06:34 GMT   |   Update On 2017-02-06 06:34 GMT
கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 85 ஆமை குஞ்சுகள் இன்று பொறித்து வெளிவந்தன. அதனை வனத்துறையினர் கடலுக்குள் விட்டனர்.

ராமேசுவரம்:

கடற்கரை மணலில் புதைத்து வைக்கப்பட்ட முட்டைகளில் இருந்து 85 ஆமை குஞ்சுகள் இன்று பொறித்து வெளிவந்தன. அதனை வனத்துறையினர் கடலுக்குள் விட்டனர்.

அழிந்து வரும் உயிரினமான கடல் ஆமைகளில், பேராமை, சிற்றாமை, பச்சை ஆமை உள்பட 5 வகைகள் உள்ளன. ராமநாதபுரம் மாவட்டம் மன்னார்வளைகுடா - பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இந்த ஆமைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.

இதையொட்டி அரிய வகை ஆமைகளை காக்கும் வகையில் ராமேசுவரம் தனுஷ்கோடி கடற்கரை பகுதியில் வனத்துறை மூலம் ஆமை முட்டை பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது.

ஆண்டு தோறும் டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலங்களில் ஆமைகள் முட்டை இடுவது வழக்கம். இதனை கண்காணித்து பொறிப்பக நிர்வாகிகள் கடற்கரைகளில் பல்வேறு இடங்களில் ஆமைகள் இட்டுச்சென்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட முட்டைகளை சேகரித்து முகுந்தராயர் சத்திரம் கடற்கரை பகுதியில் குஞ்சு பொறிப்பதற்காக புதைத்திருந்தனர்.

அதில் இன்று 85 முட்டைகளில் இருந்து குஞ்சுகள் வெளிவந்தன. தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்ட வன உயிரின காப்பாளர் தீபக் பெல்கி உத்தரவின் பேரில் மண்டபம் வனச்சரகர் சதீஸ் தலைமையிலான வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்கு சென்று 85 ஆமை குஞ்சுகளையும் எடுத்து கடற்கரை மணலில் விட்டனர். அந்த ஆமை குஞ்சுகள் மணல் பரப்பில் தவழ்ந்தபடி கடலை நோக்கி வேகமாக சென்றது.

Similar News