செய்திகள்

முஸ்லிம் ‘லீக்‘ தலைவர் அகமது மரணம்: ராமதாஸ், ஜவாஹிருல்லா இரங்கல்

Published On 2017-02-01 07:46 GMT   |   Update On 2017-02-01 07:46 GMT
இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்‘ தலைவர் இ.அகமது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் ராமதாஸ் மற்றும் ஜவாஹிருல்லா இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் இ.அகமது மறைவுக்கு பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறி இருப்பதாவது:-

முந்தைய ஆட்சியில் வெளியுறவுத்துறை இணை அமைச்சராக இ.அகமது இருந்த போது, வளைகுடா நாடுகளுடன் நல்லுறவை ஏற்படுத்த அரும் பாடுபட்டார்.

அவரது மறைவு இந்திய தேசிய யூனியன் லீக் கட்சிக்கும், கேரள அரசியலுக்கும் ஈடுசெய்ய இயலாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இந்திய தேசிய முஸ்லீம் லீக் கட்சித் தொண்டர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கேரள மாநிலத்திற்காக பாடுபட்ட அவர் தேசிய நலனே முக்கியம் என தனது இறுதி மூச்சு வரை அயராது பாடுபட்டவர். சிறுபான்மை மக்களுக்காக தனித்தன்மையோடு செயலாற்றிய பெருமைக்குரியவர். இந்திய ஒருமைப்பாடு, மத நல்லிணக்கம் ஆகிய கொள்கைகளைக் கடைப்பிடித்து நாட்டின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும். வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டியாகவும் விளங்கியவர்.

மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா:-

1991 முதல் 2014 வரை ஐ.நா. அவையில் 10 முறை இந்தியாவின் பிரதிநிதியாக பங்குகொண்ட வாய்ப்பை பெற்றவர் இ.அகமது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வளைகுடா நாடுகளுக்கு இவரை தனது சிறப்புப் பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். இந்த வாய்ப்புகளையெல்லாம் சிறப்பான முறையில் பயன்படுத்தி பல்வேறு உலக நாடுகள் குறிப்பாக அரபு நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் இடையேயான உறவுகள் மேம்பட இவர் திறம்படப்பாடுபட்டார்.

அவரது குடும்பத்தினருக்கும் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினருக்கும் மனித நேய மக்கள் கட்சியின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

அகமதுவின் உடல் சொந்த ஊரான கண்ணனூரில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது. இதில் இந்திய யூனியன் முஸ்லிம் ‘லீக்‘ தேசிய செயலாளரும், மாநில தலைவருமான கே.எம். காதர் மொய்தீன், மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள்.

Similar News