செய்திகள்

போலீஸ் மீது தவறு இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்: காவல் ஆணையர் ஜார்ஜ் உறுதி

Published On 2017-01-23 17:13 GMT   |   Update On 2017-01-23 17:13 GMT
காவலர்கள் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
சென்னை:

மெரினா போராட்டத்தில் சமூக விரோதிகள் ஊடுருவி கலவரத்தை உண்டாக்கியதாக சென்னை பெருநகர போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ், காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“மெரினாவில் போராட்டக்காரர்களிடம் அரசு எடுத்த நடவடிக்கைகள், ஜல்லிக்கட்டு சட்டம் குறித்தும் காவல் துறை சார்பில் பல முறை விளக்கம் அளிக்கப்பட்டது. மயிலாப்பூர் துணை கமிஷனர் பாலகிருஷ்ணன் மிகவும் பொறுமையாக பல முறை பேச்சுவார்த்தை நடத்தினார்.

போராட்டம் துவக்கத்தில் அமைதியாக அறவழியில் சென்றது. அதை காவல் துறை தரப்பிலும் பாராட்டினோம். போராட்ட களத்தில் சமூக விரோதிகள் ஊடுருவியது உளவுத் துறை மூலம் தெரியவந்தது. அந்த நபர்கள் மாணவர்களையும் இளைஞர்களையும் தவறான வழியில் கொண்டு சென்றார்கள்.

ஜல்லிக்கட்டு அவசர சட்டம் நிறைவேறிய பிறகு கலைந்து செல்ல அறிவுறுத்தினோம். அறவழியில் போராடிய பெரும்பாலான மாணவர்கள் கலைந்து சென்றனர். சில பிரிவினர் மட்டுமே தொடர்ந்து போராடினர். சமூக விரோதிகள் அடையாளம் காணப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். காவலர்கள் வாகனங்களுக்கு தீ வைப்பது போல, தாக்குவது போல போன்ற தவறான தகவல் பரப்படுகின்றன.

காவலர்கள் மீது தவறு இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். சமூக விரோதிகளை கண்காணித்து வருகிறோம். பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். நாளை இயல்பு நிலை திரும்பும்.பதற்றமான பகுதிகளில் அதிக அளவில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர்.  தற்போது கூட ஆங்காங்கே சமூக விரோதிகள் பிரச்சினை செய்து வருகின்றனர்” என்று தெரிவித்தார்.

Similar News