செய்திகள்

மெரினாவில் மாணவர்கள் மீது போலீஸ் நடவடிக்கை: தலையிட சென்னை ஐகோர்ட் மறுப்பு

Published On 2017-01-23 09:18 GMT   |   Update On 2017-01-23 09:18 GMT
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தரமான சட்டம் இயற்றப்பட வேண்டும் என சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக தலையிட முடியாது என சென்னை கோர்ட் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் இன்று போலீஸ்-பொதுமக்கள் மோதலாக மாறியதால் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியும் போராட்டக்காரர்களை போலீசார் கலைத்து வருகின்றனர்.

ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நிரந்தர சட்டம் இயற்ற வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாளர்கள் சென்னை மெரினா கடற்கரையில் போராடி வருகின்றனர்.

சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் உத்தரவுப்படி, போராட்டக்காரர்களை கலைந்து செல்லுமாறு இன்று காலையில் இருந்து காவலர்கள் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
ஆனால், அங்கிருந்து கலைந்து செல்ல தொடர்ந்து மறுத்துவரும் இளைஞர்கள், கடற்கரையில் மனிதசங்கிலி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தை கைவிட முடியாது எனவும், தங்களால் உடனடியாக எந்த முடிவும் எடுக்க முடியாது எனவும் இளைஞர்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் மெரினாவில் ஆங்காங்கே கூட்டமாக இளைஞர்களும், பெண்களும் கடலில் இறங்கியும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

எங்களை நெருங்கி வந்து கலைக்க முயற்சித்தால் நாங்கள் கடலுக்குள் சென்று விடுவோம் எனவும் அவர்கள் போலீசாரிடம் கூறி வருகின்றனர். இருப்பினும் பெண்களையும், குழந்தைகளையும் போலீசார் வலுக்கட்டாயமாக வெளியேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, காலை 9 மணியளவில் சென்னை திருவல்லிக்கேணி சாலை வழியாக மெரினா கடற்கரையை நோக்கி செல்ல முயன்ற சில போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டி அனுப்பினர்.

அவ்வழியாக மெரினா கடற்கரைக்கு செல்ல முயன்ற ஜல்லிக்கட்டு ஆர்வலரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் உள்பட பலர் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இதற்கிடையே, கடற்கரையை ஒட்டியுள்ள மீனவ குப்பங்களை சேர்ந்த ஒரு பிரிவினர் போராட்ட களத்தில் குதித்தனர். திருவல்லிகேணி மற்றும் பெசன்ட் நகர் பகுதியில் போலீசார் மீது சிலர் தண்ணீர் பாட்டில்களையும், கற்களையும் வீசி தாக்குதல் நடத்தினர்.

தங்கள் மீதான தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட பொருட்களை கொண்டே போலீசாரும் எதிர்தாக்குதல் நடத்தினர். சில பெண் போலீசார் அப்பகுதியில் உள்ள வீடுகளின் மீது கற்களை வீசியும் தாக்கியதை காண முடிந்தது. இந்த மோதலில் 5 போலீசார் காயமடைந்தனர்.

நிலைமை கைமீறி போனதால் வானத்தை நோக்கி போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன் பிறகும் போராட்டக்காரர்கள் கலைந்துபோக மறுத்ததால் கண்ணீர் புகை குண்டுகளை போலீசார் பிரயோகித்தனர்.

இதனால், மெரினா கடற்கரை மற்றும் சுற்றுப்புற பகுதிகள் கலவரக் காடாக மாறியுள்ளது.

இந்நிலையில், சென்னை மெரினா கடற்கரையில் போராடி வரும் மாணவர்கள் மீது இன்று காலை போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக ஐகோர்ட் தலையிட வேண்டும் என வழக்கறிஞர்கள் சுதா, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சிறப்பு மனு ஒன்றினை இன்று தாக்குதல் செய்தனர்.

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் கொண்ட அமர்வின் முன்னர் இந்த மனுவின் மீது இன்று விசாரணை நடந்தது.

மாநில அரசின் நிர்வாகம் தொடர்பான விவகாரங்களில் தலையிட முடியாது என தெரிவித்த நீதிபதிகள் இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தனர்.

Similar News