செய்திகள்

புதுவையில் ஜல்லிக்கட்டு போராட்டம் தொடர்கிறது

Published On 2017-01-23 07:36 GMT   |   Update On 2017-01-23 07:36 GMT
புதுவையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்தது.

புதுச்சேரி:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுவை-கடலூர் சாலையில் ரோடியர் மில் திடலில் கடந்த 17-ந் தேதி முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்களுடன் பெற்றோர்களும், பொது மக்களும் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர். அதோடு போராட்ட மாணவர்களுக்கு பல்வேறு அமைப்பினரும், தன்னார்வலர்களும் உணவு, குடிநீர், ஸ்நாக்ஸ் ஆகியவற்றை வழங்கினார்.

மேலும், மாணவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் சிலம்பாட்டம், சேவல் சண்டை ஆகியவை நடந்தது. மற்றொருபுறம் மேள வாத்திய குழுவினர் இசையமைத்து மாணவர்களை உற்சாகப்படுத்தினர்.

இதனால் போராட்ட களமே திருவிழா கோலம் பூண்டது போல் காணப்பட்டது. இதற்கிடையே அவசர சட்டம் தமிழக சட்டசபையில் இன்று தாக்கல் செய்யப்பட இருப்பதால் போராட்டத்தை கைவிடுமாறு தமிழகத்தில் கோரிக்கை எழுந்தது.

இதற்கு தமிழகத்தில் மாணவர்கள் மறுப்பு தெரிவித்து விட்டனர். அதே போல் ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு காணும் வரை போராட்டம் தொடரும் என புதுவை மாணவர்கள் அறிவித்தனர்.

இந்த நிலையில் இன்று (திங்கட்கிழமை) 7-வது நாள் போராட்டம் தொடங்கியது. வழக்கமாக புதுவை போராட்ட களத்தில இரவில் அதிகமான மாணவர்கள் தங்குவது இல்லை.

நூற்றுக்கணக்கான மாணவ -மாணவிகள் மட்டுமே தங்கி இருப்பார்கள். காலை 8.30 மணிக்கு மேல் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வருவார்கள். அதே போல் இன்றும் காலையில் கல்லூரி வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் போராட்ட களம் வந்தனர். நேரம் செல்ல செல்ல மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்த வண்ணம் இருந்தது.

இந்த நிலையில் காலை 9 மணியளவில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராஜீவ் ரஞ்சன் போராட்ட களத்தில் மாணவர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் மாணவர்கள் தமிழக சட்டசபையில் அவசர சட்டம் நிறைவேற்றப்படுகிறது. அதன் பிறகு தமிழகத்தில் மாணவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை கண்காணித்து முடிவு எடுப்பதாக தெரிவித்தனர்.

இதனால் புதுவையில் ஜல்லிக்கட்டுக்கான போராட்டம் இன்று 7-வது நாளாக நீடித்தது.

Similar News