செய்திகள்
புதுவை அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் மனு அளித்த காட்சி.

புதுவையிலும் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம்: சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு

Published On 2017-01-22 08:18 GMT   |   Update On 2017-01-22 08:18 GMT
புதுச்சேரி சட்டசபையிலும் ஜல்லிக்கட்டு நடத்த சட்டம் இயற்ற வேண்டும் என்று சபாநாயகர் வைத்திலிங்கத்திடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
புதுச்சேரி:

புதுவை சட்டமன்ற அ.தி.மு.க. தலைவர் அன்பழகன் தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் அசனா, பாஸ்கர், வையாபுரி மணிகண்டன் ஆகியோர் சபாநாயகர் வைத்தி லிங்கத்தை சந்தித்து மனு அளித்தனர்.

காளையை காட்சிப் படுத்தப்பட்ட வன விலங்குகள் பட்டியலில் 2011-ல் மத்திய அரசு சேர்த்தது. மேலும், காளை மாடுகளுக்கு பயிற்சி அளித்து, ஜல்லிக்கட்டில் கலந்து கொள்ள செய்யக் கூடாது என உச்சநீதிமன்றம் 2014-ல் தடை விதித்தது.

தற்போது ஒட்டுமொத்த தமிழ் சமுதாயமும் ஜல்லிக்கட்டு நடத்த போராடி வரும் நிலையில் தமிழக அரசு உரிய வரைவு தயாரித்து மத்திய அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. இந்த சட்ட திருத்தம் தமிழகத்துக்கு மட்டும்தான் பொருந்தும். புதுவைக்கு பொருந்தாது.

எனவே, புதுவையில் ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டியை தொடர்ந்து நடத்த உரிய சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும். வருகிற 24-ந் தேதி நடைபெற இருக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளிலேயே இந்த சட்டத்தை கொண்டு வர வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளனர்.

Similar News