செய்திகள்

ரெயில் கூரை மீது ஏறி போராட்டம்: மின்சாரம் தாக்கி உடல் கருகிய வாலிபருக்கு தீவிர சிகிச்சை

Published On 2017-01-20 10:53 GMT   |   Update On 2017-01-20 10:54 GMT
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சேலத்தில் ரெயில் கூரை மீது ஏறி போராட்டம் நடத்திய வாலிபரை மின்சாரம் தாக்கியது. உடல் கருகிய வாலிபர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சேலம்:

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க வேண்டும், பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி சேலத்தில் மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையொட்டி சேலம் பெரியார் மேம்பாலப் பகுதியில் நேற்று பெங்களூரு -காரைக்கால் ரெயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ரெயிலின் கூரை மீது ஏறி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலத்தை அடுத்த வீராணம் சத்யா நகரை சேர்ந்த ராஜா என்பவரது மகனான தொழிலாளி லோகேஷ் (வயது 17) என்பவர் அந்த ரெயிலின் கூரை மீது ஏறி கையை உயர்த்தி கோ‌ஷம் எழுப்பினார்.

எதிர்பாராத விதமாக அந்த வழியாக சென்ற மின் கம்பியில் அவரது கை பட்டதால் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் உடல் கருகிய அவர் அலறி துடித்தார்.

பின்னர் 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் லோகேஷ் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த சேலம் மாவட்ட கலெக்டர் சம்பத் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று லோகேசுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்ததுடன் அவரது பெற்றோருக்கும் ஆறுதல் கூறினார்.

80 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தனி மருத்துவக்குழு அமைக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Similar News