செய்திகள்

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நீர் செல்வதில் தாமதம்

Published On 2017-01-20 09:53 GMT   |   Update On 2017-01-20 09:54 GMT
குறைந்தஅளவு தண்ணீர் வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் ஏரிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊத்துக்கோட்டை:

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி ஏரியின் நீர்மட்டம் குறைந்ததையடுத்து கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின்படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து கடந்த 9-ந் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. படிப்படியாக 1700 கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

கிருஷ்ணா கால்வாய் ஓரத்தில் உள்ள சுமார் 800-க்கும் மேற்பட்ட மதகுகளை ஆந்திர விவசாயிகள் திறந்து தங்களது விளை நிலங்களுக்கு நீரை பாய்ச்சியதால் குறிப்பிட்ட நாளில் தமிழக எல்லைக்கு கிருஷ்ணா நீர் வரவில்லை.

இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர மாநிலம் சென்று திறக்கப்பட்ட மதகுகளை மூடும்படி அங்குள்ள விவசாயிகளிடம் தெரிவித்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் கிருஷ்ணா தண்ணீர் தமிழக எல்லையான தாமரைக்குப்பம் ‘ஜீரோ’ பாய்ண்ட் பகுதிக்கு வந்து சேர்ந்தது. வினாடிக்கு வெறும் 5 கன அடி தண்ணீர் மட்டும் வந்து கொண்டு இருக்கிறது.

‘ஜீரோ’ பாயிண்டில் இருந்து 25 கி.மீட்டர் தூரத்தில் பூண்டி ஏரி உள்ளது. வழக்கமாக தமிழக எல்லைக்கு வரும் தண்ணீர் ஒரே நாளில் பூண்டி ஏரிக்கு சென்றடையும்.

தற்போது குறைந்தஅளவு தண்ணீர் வருவதால் பூண்டி ஏரிக்கு கிருஷ்ணாநீர் செல்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. இந்த தண்ணீர் ஏரிக்கு நாளை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிருஷ்ணா கால்வாயில் திறக்கப்பட்ட மதகுகளை ஆந்திர விவசாயிகள் இன்னும் முழுமையாக மூடாததே தண்ணீர் வரத்து குறைவுக்கு காரணம். இந்த மதகுகளை மூட நடவடிக்கை எடுக்கும்படி தமிழக பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆந்திர அதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

Similar News