செய்திகள்

ஜல்லிக்கட்டு அவசரசட்டத்துக்கு அனுமதி அளிக்க வேண்டும்: டாக்டர் ராமதாஸ் அறிக்கை

Published On 2017-01-20 07:38 GMT   |   Update On 2017-01-20 07:38 GMT
தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறினார்.

சென்னை:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஜல்லிக் கட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு வசதியாக அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த தமிழகத்தின் கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்துவிட்ட நிலையில், கடைசி ஆயுதமாக தமிழக அரசே ஜல்லிக் கட்டுக்காக அவசர சட்டம் கொண்டு வர முடிவு செய்துள்ளது.

தமிழக அரசின் இந்நடவடிக்கை பல்வேறு வினாக்களை எழுப்புகிறது. இப்படி ஓர் அவசரச் சட்டத்தை தமிழக அரசால் கொண்டு வர முடியும் என்றால், அதை ஏன் பொங்கலுக்கு முன்பே பிறப்பித்து பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதித்திருக்கக் கூடாது?

இப்படி ஓர் அவசர சட்டம் கொண்டு வர முடியும் என்பது அப்போதே அரசுக்கு தெரியாதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இருப்பினும் ஜல்லிக்கட்டை நடத்துவதற்கான இன்னொரு முயற்சி என்ற வகையில் தமிழக அரசின் இந்த முடிவு தாமதமான ஒன்று என்றாலும் வரவேற்கத்தக்கது.

காளைகள் பங்கேற்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளை தடை செய்வது தேவையற்றது. இதை உணர்ந்து தமிழக அரசின் வரைவு அவசர சட்டத்திற்கு மத்திய உள்துறை அமைச்சகமும், குடியரசுத் தலைவரும் உடன டியாக ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இந்த நடைமுறைகள் அனைத்தும் 24 மணி நேரத்தில் முடிக்கப்பட்டு அடுத்த வாரத்தில் ஜல்லிக் கட்டுப் போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். வரைவு அவசர சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கும் வரை தமிழக முதல்-அமைச்சரும், அமைச்சர்களும் டெல்லியில் முகாமிட்டு, வெற்றியுடன் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

ராமதாஸ் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப்போட்டிகளை நடத்த அனுமதிக்க வேண்டும், தமிழர்களின் கலாச்சார எதிரியான பீட்டா அமைப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் முதலிலும், அதன்பின்னர் சென்னை மெரினாவிலும் தொடங்கிய மாணவர் போராட்டங்கள் இன்று மக்கள் போராட்டமாக மாறி தமிழகம் முழுவதும் விரிவடைந்துள்ளன.

ஜல்லிக்கட்டுப் போராட்டத்திற்கு உள்ள நற்பெயரை கெடுத்து விட்டால் போராட்டத்தை வீழ்த்தி விடலாம் என்ற தீய நோக்குடன், தங்கள் ஆதரவாளர்களை மாணவர்கள் மத்தியில் ஊடுருவச் செய்து போராட்டத்தை திசை திருப்புவதற்கு முயல்கிறார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ஜனவரி 16-ஆம் தேதி தொடங்கி இன்று வரை 5 நாட்களாக யாருக்கும் பாதிப்பில்லாமல் எவ்வாறு போராட்டம் நடைபெறுகிறதோ, அதே அணுகுமுறை நீடிக்க வேண்டும். ரெயில் மறியல், பஸ் மறியல் உள்ளிட்ட செயல்களில் மாணவர்கள் ஒருபோதும் ஈடுபடக்கூடாது. மாணவர்கள் தொடங்கிய எந்த போராட்டமும் வெற்றி பெறாமல் இருந்ததில்லை. அதைப்போலவே ஜல்லிக் கட்டுக்கு ஆதரவான மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் போராட்டமும் வெற்றி பெற வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News