செய்திகள்

தமிழகம் முழுவதும் போராட்டம் நீடிப்பு

Published On 2017-01-19 07:32 GMT   |   Update On 2017-01-19 07:32 GMT
ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கும் தடை விதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
சென்னை:

ஜல்லிக்கட்டை ஆதரித்தும், பீட்டா அமைப்புக்கும் தடை விதிக்க கோரியும் தமிழகம் முழுவதும் மாணவர்களும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தஞ்சை தலைமை தபால் நிலையம் முன் நூற்றுக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள் நேற்று முன்தினம் தர்ணாவில் ஈடுபட்டனர்.

நேற்று 2-வது நாளாக மீண்டும் அவர்கள் போராட்டத்தை தொடங்கினார்கள். தஞ்சை மன்னர் சரபோஜி கல்லூரி, குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து விட்டு பங்கேற்றனர்.

நேற்று இரவு அவர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினார்கள். கொட்டும் பனியிலும் அவர்கள் விடிய, விடிய போராட்டத்தை தொடர்ந்தனர். இன்று 3-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

ஒரத்தநாடு பாரதிதாசன் பல்கலைக் கழக உறுப்பு மகளிர் கல்லூரி முன் அக்கல்லூரி மாணவிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பாப்பாநாட்டிலும் 50-க்கும் அதிகமானோர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஈரோட்டில் இன்று 3-வது நாளாக மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. வ.உ.சி திடலில் குவிந்த மாணவிகளை மாணவர்கள் இரவில் வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டனர். ஆனால் மாணவர்கள் வ.உ.சி. திடலிலேயே கொட்டும் பனியில் விடிய-விடிய அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

மதுரை அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை முன்பு அமர்ந்து, சீமான் தனியாக இரவு 9 மணி முதல் தொடர் போராட்டத்தை தொடங்கினார். இந்த போராட்டம் இன்று 2-வது நாளாக நீடித்தது. இதில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

தொடர் போராட்டத்தில் பங்கேற்ற நாம் தமிழர் கட்சியினருக்கு இன்று காலை, அப்பகுதி பொதுமக்கள் டீ, வடை வழங்கினார்கள்.

போராட்டம் குறித்து சீமான் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்காக நாளை (20-ந் தேதி) வரை மதுரையில் தங்கி இருந்து போராடுவேன். மத்திய- மாநில அரசுகள் ஜல்லிக்கட்டு நடத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 21-ந்தேதி அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டை நடத்துவேன் என்றார்.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவ- மாணவிகள் நேற்று முன்தினம் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளான நேற்று போராட்டம் தீவிரமானது.

இந்தநிலையில் பல்கலைக்கழக நிர்வாகம் வருகிற 22-ந்தேதி வரை விடுமுறை என்று அறிவித்தது. இருப்பினும் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் போராட்டத்தை தொடர்ந்தனர். கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய போராட்டம் நீடித்தது.

கோவை வ.உ.சி. மைதானத்தில் நேற்று கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விடிய, விடிய மைதானத்திலேயே அமர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோ‌ஷமிட்டனர்.

இன்று 3-வது நாளாக மாணவர்கள் போராட்டம் தொடர்ந்தது. காலையிலேயே மைதானத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்களும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான பாடல்களுக்கு கைதட்டி ஆரவாரம் செய்து உற்சாகமாக போராட்டத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களான போதும் மாணவர்களிடம் எந்த களைப்பும் தெரியவில்லை.

நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் இன்று 3-வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடியில் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள எஸ்.ஏ.வி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நேற்று முன்தினம் முதல் போராட்டம் நடத்தப்பட்டது. இரவு விடிய விடிய நடந்த போராட்டம் இன்று 3-வது நாளாக நீடித்தது.

சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கொட்டும் பனியையும் பொருட்படுத்தாமல் விடிய விடிய சாலையிலேயே படுத்து தூங்கினர். இன்று 2-வது நாளாக நீடித்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்த படியே இருந்தது.

பீர்க்கன்கரணை பஸ் நிலையம் அருகே கல்லூரி மாணவர்கள், ஐடி ஊழியர்கள் சுமார் 300 பேர் போராட்டம் நடத்தினர். தாம்பரம் சானட்டோரியம் ஜி.எஸ்.டி. சாலை அருகே சாப்ட்வேர் என்ஜினீயர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிழக்கு தாம்பரம் பூண்டி பஜார் பகுதியில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சேலையூரை அடுத்த அகரம் தென்சாலை, சிட்லபாக்கம் ஆர்.பி.சாலை, முடிச்சூர் லட்சுமிபுரம், உள்ளிட்ட இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.

பல்லாவரம் பஸ் நிலையத்தில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரம் இருந்தனர். அனகாபுத்தூர் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஊத்துக்கோட்டை அருகே உள்ள தொம்பரம்பேடுவில் இன்று காலை மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்த பெண்கள் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினர். இதில் ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.

இதே போல் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நீடித்து வருகிறது.

Similar News