செய்திகள்

ஜல்லிக்கட்டு போராட்டம்: மத்திய, மாநில அரசுகளுக்கு மாலை 6 மணி வரை கெடு விதித்த அலங்காநல்லூர் மக்கள்

Published On 2017-01-18 10:59 GMT   |   Update On 2017-01-18 13:02 GMT
ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் தொடர்பாக மாலை 6 மணிக்குள் அறிவிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர்.
மதுரை:

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தமிழ்நாடு முழுவதும் தீவிரமடைந்து தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று தொடங்கி விடிய, விடிய நடைபெற்று வரும் இந்த போராட்டத்திற்கு முன்னணி நடிகர்கள் பலரும் நேரில் சென்று ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இதுதவிர பல்வேறு மாவட்டங்களிலும் கல்லூரி மாணவர்கள் தங்கள் வகுப்புகளைப் புறக்கணித்து போராடி வருகின்றனர். மாணவர்களின் இந்த தன்னிச்சையான போராட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் ஆதரவு பல்கிப பெருகி வருகிறது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டத்தினை மாலை 6 மணிக்குள் இயற்றிட வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மதுரை அலங்காநல்லூர் கிராம மக்கள் கெடு விதித்துள்ளனர். அலங்காநல்லூரில் நடைபெற்ற கிராம பொதுக்கூட்டத்தில் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அவசர சட்டம் இயற்றப்படவில்லையெனில் இந்த போராட்டம் காலவரையற்ற போராட்டமாக மாறும் என அலங்காநல்லூர் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News