செய்திகள்

வங்கிகளில் பணம் எடுக்க அலைமோதிய மக்கள் கூட்டம்

Published On 2017-01-18 09:37 GMT   |   Update On 2017-01-18 09:37 GMT
தொடர் விடுமுறைக்கு பிறகு இன்று வங்கிகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலைமோதியது. ஆனால் வங்கிகளுக்கு தேவையான அளவு பணம் இன்னும் வினியோகிக்கப்படாததால் குறைந்த அளவு தொகையினை வாடிக்கையாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.
சென்னை:

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வங்கி ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து துறை வாரிய ஊழியர்களுக்கு பொங்கல் விடுமுறை 3 நாட்கள் விடப்பட்டு இருந்தது. திடீரென எம்.ஜி. ஆர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவிற்கு தமிழக அரசு பொது விடுமுறையை 17-ந்தேதி அறிவித்தது.

இதனால் 4 நாட்கள் தொடர்ந்து அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள், வங்கிகள் எதுவும் செயல்படவில்லை. வங்கிகள் தொடர்ச்சியாக 4 நாட்கள் மூடப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

பணநீக்க மதிப்பால் கடந்த 2 மாதமாக அவதிப்பட்டு வரும் நிலையில் இன்னும் முழுமையாக ஏ.டி.எம்.கள் செயல்படவில்லை. ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாக செயல்படுகின்றன.

சென்னை தவிர பிற நகரங்களில் கூட ஏ.டி.எம்.களில் கூட்டம் அதிகளவு இல்லை. ஆனால் 80 லட்சம் மக்கள் தொகையை கொண்ட சென்னை பெருநகரத்தில் பெரும்பாலான ஏ.டி.எம்.கள் செயல்படாமல் மூடியே கிடப்பதால் மக்கள் அவசர தேவைக்கு பணம் எடுக்க முடியவில்லை.

வங்கிகளில் கூட்டம் குறைந்த போதிலும் ஏ.டி.எம்.களில் பணம் நிரப்பப்படாமல் இதுவரையிலும் செயல்இழந்து கிடப்பதால் வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று பணம் எடுக்க வேண்டிய நிலை உள்ளது.

24 மணி நேரமும் செயல்படக்கூடிய ஏ.டி.எம்.கள் 2 மாதங்களுக்கும் மேலாக மூடிகிடப்பதால் மக்கள் இன்னும் எளிதாக பணம் எடுக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் ஏ.டி.எம்-ல் இருந்து நாள் ஒன்றுக்கு ரூ. 4,500 எடுக்க முடியும் என்ற உச்சவரம்பை ரூ. 10 ஆயிரமாக ரிசர்வ் வங்கி நேற்று முன்தினம் உயர்த்தி அறிவித்தது.

இது ஏழை, எளிய மக்களுக்கு மகிழ்ச்சி அளித்தாலும் எ.டி.எம்.கள் செயல்படாமல் பூட்டியே கிடப்பதால் எவ்வித பயனும் இல்லை என்று வாடிக்கையாளர்கள் மனம் குமுறுகிறார்கள்.

வாரத்திற்கு ரூ. 24 ஆயிரம் எடுக்க முடியும் என்றாலும் ஏ.டி.எம்.கள் இன்னும் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் பூட்டு போடப்பட்டு மூடியே கிடக்கின்றன.

தனியார் வங்கி ஏ.டி.எம்.கள் மட்டுமே செயல்படுகின்றன. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் உள்ள மக்கள் பணம் எடுப்பதற்கு வங்கிகளையே நாட வேண்டிய நிலை ஏற்பட்டது.

தொடர்விடுமுறையால் ஏ.டி.எம்.களில் வைக்கப்பட்ட பணமும் தீர்ந்து விட்டதால் ‘நோ கேஸ்’ போர்டும் வைக்கப்பட்டதால் பொங்கல் பண்டிகை நாட்களில் கணக்கில் பணம் இருந்தும் பணம் எடுக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

ஏ.டி.எம்-ல் 10 ஆயிரம் எடுக்க உச்சவரம்பு உயர்த்தப்பட்டாலும் பணம் இல்லாத ஏ.டி.எம்.களாலும், மூடி கிடக்கும் ஏ.டி.எம்.களாலும் எந்த பயனும் இல்லை என்ற மனம் புழங்கினார்கள்.

இந்த நிலையில் இன்று வங்கிகள் திறக்கப்பட்டதால் கூட்டம் அலை மோதியது. சாதாரண கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் தவிர நடப்பு கணக்கு வைத்துள்ள வியாபாரிகள், வர்த்தக பிரமுகர்கள், நிறுவனங்களை சார்ந்தவர்கள் அதிகளவு வந்ததால் வங்கிகளில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

நடப்பு கணக்கில் இன்று முதல் வாரத்திற்கு ஒரு லட்சம் எடுத்து கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. இதனால் நடப்பு கணக்கு வைத்துள்ளவர்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

ஆனால் வங்கிகளுக்கு தேவையான அளவு பணம் இன்னும் வினியோகிக்கப்படாததால் குறைந்த அளவு தொகையினை வாடிக்கையாளர்களுக்கு பிரித்து வழங்கப்பட்டது.

Similar News