செய்திகள்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: சிலைக்கு மாலை அணிவித்து தீபா மரியாதை

Published On 2017-01-17 06:29 GMT   |   Update On 2017-01-17 06:29 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினமான இன்று தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்ற தீபா அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
சென்னை:

ஜெயலலிதா மரணத்தை தொடர்ந்து அவர் வகித்து வந்த முதல்-அமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், பொதுச்செயலாளர் பொறுப்பை சசிகலாவும் ஏற்றுள்ளனர்.

அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரும் இதை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் அ.தி.மு.க.வில் சிலர் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபாவை தீவிர அரசியலுக்கு வருமாறு அழைத்தனர். தீபா வசிக்கும் தியாகராய நகர் சிவஞானம் தெரு வீட்டுக்கு தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் சென்று அவருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஜெயலலிதா வகித்த பொதுச்செயலாளர் பதவியை ஏற்று அ.தி.மு.க.வை வழி நடத்த வர வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். தீபாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் பல ஊர்களில் தீபா பெயரில் பேரவை தொடங்கப்பட்டது.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து தினமும் தீபாவை காண அ.தி.மு.க. தொண்டர்கள் சென்னை வந்தனர். இதையடுத்து தீபா அவர்களை சந்தித்தார். தொண்டர்கள் வருகை அதிகரித்ததைத் தொடர்ந்து அரசியலில் ஈடுபட அவர் முடிவு செய்தார்.

இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஜனவரி 17-ந்தேதி (இன்று) எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த தினத்தன்று வெளியிடப் போவதாக தீபா தெரிவித்தார். இதையடுத்து தமிழக அரசியல் களத்தில் தீபாவின் வருகை பல்வேறு தரப்புகளிலும் மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத் தியது. அதை உறுதிபடுத்தும் வகையில் தீபா ஆதரவாளர்கள் இன்று காலை சென்னையில் குவிந்தனர்.

இன்று அதிகாலையிலேயே தியாகராய நகரில் உள்ள தீபா வீட்டு முன்பு ஆயிரத்துக்கும் மேற்பட்ட அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டனர். 6 மணிக்கு வீட்டில் இருந்து வெளியில் வந்த அவர், அங்கு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் தீபாவை வாழ்த்தி கோ‌ஷமிட்டனர். அவர்கள் அனைவருக்கும் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இனிப்புகள் வழங்கப்பட்டது.

அதன் பிறகு தீபா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் கடந்த ஒரு மாதமாக தினமும் என்னை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தமிழ்நாடு முழுவதிலும் இருந்து தினமும் அவர்கள் நம்பிக்கையோடு என்னை வந்து பார்த்தனர். அவர்களது நம்பிக்கையை நான் ஒரு போதும் வீணாக்க மாட்டேன்.

ஏற்கனவே நான் அரசியலில் குதித்து விட்டேன். இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன். இது பற்றிய முழு விபரங்களையும் பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளியிடுவேன்.

இவ்வாறு தீபா கூறினார்.

இதையடுத்து தீபா தொண்டர்கள் புடைசூழ தியாகராய நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்துக்கு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பிறகு அண்ணா சாலையில் எம்.ஜி.ஆர். சிலை உள்ள பகுதிக்கு புறப்பட்டு சென்றார். அங்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து வணங்கினார்.



இதையடுத்து காலை 9 மணியளவில் மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதிக்கு தீபா சென்றார். அங்கு சுமார் 5 ஆயிரம் அ.தி.மு.க. தொண்டர்கள் திரண்டிருந்தனர். அவர்கள், “இளைய புரட்சித் தலைவி தீபா அம்மா வாழ்க” என்று கோ‌ஷமிட்டு வரவேற்பு கொடுத்தனர். அவர்கள் அனைவரும் கைகளில் அ.தி.மு.க. கொடியை ஏந்தி இருந்தனர்.

பலர் தீபா படம் பொறித்த அ.தி.மு.க. கொடியை வைத்திருந்தனர். அவர்களுக்கு வணக்கம் தெரிவித்தப்படி தீபா காரில் இருந்து இறங்கினார். முதலில் எம்.ஜி.ஆர். சமாதியில் அவர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இதையடுத்து ஜெயலலிதா சமாதிக்கு தீபா சென்றார். அப்போது அ.தி.மு.க. தொண்டர்கள் பாதையின் இரு பக்கமும் திரண்டு நின்று தீபா மீது மலர்களை தூவி வாழ்த்து கோ‌ஷமிட்டனர். “தீபா அம்மா வாருங்கள், தலைமை ஏற்க வாருங்கள்” என்று குரல் எழுப்பினார்கள்.

தொண்டர்கள் கூட்ட வெள்ளத்தில் தத்தளித்தப்படிதான் ஜெயலலிதா சமாதி அருகே தீபாவால் செல்ல முடிந்தது. ஜெயலலிதா சமாதியில் வைத்து வழிபடு வதற்காக தீபா மிகப்பெரிய ரோஜாப்பூ மாலை கொண்டு வந்திருந்தார். கடும் நெரிசலுக்கு உள்ளான அவர் அந்த மாலையை மிகுந்த சிரமத்துக்கு பிறகே ஜெயலலிதா சமாதியில் வைக்க முடிந்தது.

அங்கு நின்று வழிபட இயலாததால் ஜெயலலிதா சமாதியை தீபா சுற்றி வந்து வழிபட்டார். இதற்கே அவருக்கு சுமார் 30 நிமிடம் ஆகி விட்டது. அதன் பிறகு தீபா அங்கிருந்து புறப்பட்டார்.

Similar News