செய்திகள்

மாயமான மனைவியை மீட்டுத்தரக்கோரி பெயிண்டர் தற்கொலை முயற்சி

Published On 2017-01-10 10:09 GMT   |   Update On 2017-01-10 10:09 GMT
மாயமான மனைவியை மீட்டுத்தரக்கோரி வேலூர் எஸ்.பி. அலுவலகம் முன்பு பெயிண்டர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
வேலூர்:

வேலூர் பில்டர்பெட் ரோட்டை சேர்ந்தவர் பரந்தாமன் (வயது 34). பெயிண்டர். இவரது மனைவி செல்வி. சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிந்திருந்த பரந்தாமன் சபரிமலை கோவிலுக்கு சென்றார்.

கடந்த 2-ந்தேதி அவர் ஊருக்கு திரும்பினார். வீட்டுக்கு வந்து பார்த்தபோது அவரது மனைவி செல்வியை காணவில்லை. பல இடங்களில் தேடி பார்த்தும் செல்வி கிடைக்கவில்லை.

இதைத்தொடர்ந்து தனது மனைவியை மீட்டுத்தரக் கோரி புகார் கொடுக்க வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு பரந்தாமன் சென்றார். ஆனால் அவர் கொடுத்த மனுவை போலீசார் வாங்க மறுத்ததாக தெரிகிறது.

இதனால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று மனு கொடுக்க பரந்தாமன் நினைத்தார். அதன்படி நேற்று புகார் மனுவுடன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்றார். அங்கும் புகார் மனு பெறப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை தனது மோட்டார் சைக்கிளில் பரந்தாமன் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். மாயமான தனது மனைவியை மீட்டுத் தரக்கோரியும், தனது புகார் மனுவை போலீசார் ஏற்காததை கண்டித்தும் திடீர் போராட்டத்தில் இறங்கினார்.

கோரிக்கையை வலியுறுத்தி அவர் தர்ணாவில் ஈடுபட்டார். சிறிது நேரத்துக்கு பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் இருந்த மண்ணெண்ணெய் கேனை எடுத்தார். மண்ணெண்ணெயை தனது உடலில் ஊற்ற முயன்றார்.

இதை பார்த்த போலீசார் அங்கு வந்து மண்ணெண்ணெய் கேனை வாங்கி தற்கொலை முயற்சியை தடுத்தனர். பின்னர் பரந்தாமனிடம் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டது.

அவரது கோரிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து பரந்தாமன் போராட்டத்தை கைவிட்டார். இந்த சம்பவம் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News