செய்திகள்

நள்ளிரவு முதல் டெபிட், கிரெடிட் கார்டுகளை ஏற்க முடியாது: பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம்

Published On 2017-01-08 11:10 GMT   |   Update On 2017-01-08 11:10 GMT
நள்ளிரவு முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி இரவு பிரதமர் மோடி 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவித்தார். அதன்பிறகு நாட்டு மக்கள் ரொக்கமில்லா பண பரிவர்த்தனைக்கு மாற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

மக்களும் அதற்கேற்றபடி சில கொள்முதலுக்கு டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றன. குறிப்பாக பெட்ரோல் நிலையங்களில் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை அதிகரித்துள்ளது. நவம்பர் 8-ந்தேதிக்குப்பின் ரொக்கமில்லா பண பரிவர்த்தனை மூலம் 50 முதல் 60 சதவீதம் விற்பனை அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சில குறைபாடுகள் இருப்பதால் இன்று நள்ளிரவு முதல் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் ஏற்றுக் கொள்ளப்படாது என்று தமிழ்நாடு பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பெட்ரோல் முகவர் சங்கத்தை சேர்ந்த முக்கிய பொதுச் செயலாளர் ஹைதர் அலி கூறுகையில் ‘‘பணமிழப்பு நடவடிக்கைக்குப் பின் ரொக்கமில்லா விற்பனை 50 முதல் 60 சதவீதம் அதிகரித்துள்ளது. ஸ்வைப் மூலம் வரும் பணம் வங்கிகளில் உடனடியாக வரவு வைக்கப்படும். தற்போது வங்களில் வரவு வைக்க மூன்று அல்லது நான்கு நாட்கள் ஆகியது. இதனால் பணத்தை எடுக்க எங்களுக்க மிகுந்த சிரமம் ஏற்பட்டுள்ளது.

மேலும், வாடிக்கையாளர்களுக்கு 0.7 சதவீதம் தள்ளுபடி என மத்திய அரசு அறிவித்துள்ளது. அந்த பணம் உடனடியாக உரிமையாளர்களுக்கு கிடைப்பதில்லை. மேலும் வரவு செலவு குறித்து வங்கிகள் முறையான தகவல்களை தெரிவிப்பதில்லை. எச்.டி.எஃப்.சி. வங்கி 0.25 சதவீதத்தில் இருந்து 1 சதவீதம் வரை சேவை வரி விதிக்கப்படும் என்று அறிக்கை அனுப்பியுள்ளது. எங்களுக்கு 1.5 சதவீதம் வரைதான் கமிஷன் (மார்ஜின்) கிடைக்கும். இதில் 1 சதவீதம் வரை சேவை வரி செலுத்தினால் எங்களால் பங்க்குகளை நடத்த முடியாது. இதனால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’’ என்றார்.

Similar News