செய்திகள்

தமிழக சட்டசபை 23-ந் தேதி கூடுகிறது?

Published On 2017-01-06 23:48 GMT   |   Update On 2017-01-06 23:48 GMT
இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் 23-ந் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை:

இந்த ஆண்டுக்கான தமிழக சட்டசபையின் முதல் கூட்டத்தொடர் கவர்னர் உரையுடன் 23-ந் தேதி தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டசபையின் நிகழ்ச்சிகள், ஒவ்வொரு ஆண்டும் கவர்னர் உரையுடன் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் இம்மாதம் 4-ம் வாரம் தொடங்குவதாக கூறப்படுகிறது. மேலும், 23-ந் தேதி அன்று கவர்னர் உரையாற்றுவார் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து சட்டசபை வட்டாரத்தில் விசாரித்தபோது, சட்டசபை கூட்டத்தொடர் தொடர்பாக அரசுக்கு கோப்பு அனுப்பப்பட்டுள்ளதாகவும், கவர்னர் மற்றும் முதல்-அமைச்சர் தரப்பில் விவாதம் நடத்தப்பட்டு, சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதி முடிவு செய்யப்படும் என்று கூறப்பட்டது.

சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் தேதி தொடர்பான அறிவிப்பாணை விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அதன் பிறகே கவர்னர் உரையாற்றி கூட்டத்தொடர் தொடங்கும் தேதி உறுதியாக தெரியவரும்.

சட்டசபையில் கவர்னர் உரையாற்றிய மறுநாளில் ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் சிறப்பு கூட்டம் நடத்தப்படும் என்று தெரிகிறது.

அன்று ஜெயலலிதாவின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடர் சுமார் ஒரு வாரம் வரை நீடிக்கும் என்று தெரிகிறது. கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதன் மீது அனைத்து கட்சி எம்.எல்.ஏ.க்களும் விவாதிப்பார்கள்.

கூட்டத்தொடரின் கடைசி நாளில் எம்.எல்.ஏ.க்களின் விவாதத்துக்கு முதல்-அமைச்சர் பதில் அளித்து பேசுவார். 

Similar News