செய்திகள்

இளவரசன் மர்ம மரணம்: போலீஸ் அதிகாரியிடம் நீதிபதி இன்று விசாரணை

Published On 2017-01-06 03:06 GMT   |   Update On 2017-01-06 03:08 GMT
காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசனின் மர்ம மரணம் குறித்து போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்கிடம் நீதிபதி சிங்காரவேலு இன்று விசாரணை நடத்துகிறார்.
சென்னை:

தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இளவரசன் மற்றும் செல்லன்கொட்டாயைச்சேர்ந்த திவ்யா ஆகியோர் காதலித்து 2013-ம் ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். அவர்களின் காதல் கலப்பு திருமணத்தால் வேதனை அடைந்த திவ்யாவின் தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதைத்தொடர்ந்து இருவேறு பிரிவினர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் நத்தம் காலனி அண்ணாநகர் மற்றும் கொண்டாம்பட்டி பகுதி மக்களின் வீடுகள் மற்றும் உடமைகள் சேதப்படுத்தப்பட்டன. மேலும் பல குடிசைகள் தீயிட்டு கொளுத்தப்பட்டன.

இந்த சூழ்நிலையில் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன் தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறத்தில் உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் பிணமாக கிடந்தார். அவரது மரணம் குறித்து சமூக ஆர்வலர்களும் தனிநபர்களும் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர். இளவரசனின் தந்தை தனது மகன் இறப்பில் பல்வேறு சந்தேகம் இருப்பதாக புகார் கூறினார்.

இதையொட்டி இளவரசன் மரணத்தில் உண்மை நிலவரத்தை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி சிங்காரவேலு தலைமையில் கமிஷன் அமைக்கப்பட்டது. இந்த கமிஷன் சென்னை டி.பி.ஐ.வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. நீதிபதி சிங்காரவேலு தலைமையில் உள்ள கமிஷன் தர்மபுரிக்கு சென்று அரசு அதிகாரிகளிடம் விசாரணை நடத்தியது.

இந்த கமிஷன் இதுவரை 18 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளது. இளவரசன் மரணம் அடைந்தபோது தர்மபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றியவர் அஸ்ரா கார்க். இவர் தற்போது சி.பி.ஐ. போலீஸ் அதிகாரியாக மத்திய அரசு பணிக்கு மாற்றப்பட்டு உள்ளார். இளவரசன் மரணம் குறித்து போலீஸ் அதிகாரி அஸ்ரா கார்க், இந்த கமிஷன் முன் இன்று(வெள்ளிக்கிழமை) சாட்சியம் அளிக்கிறார். அவரிடம் நீதிபதி விசாரணை நடத்துகிறார்.

இளவரசன் மரணம் குறித்து அப்போதைய தர்மபுரி மாவட்ட கலெக்டரும், தற்போது உயர்கல்வித்துறை இணை செயலாளராக இருக்கும் லில்லியிடமும், அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் பணியாற்றிய உதவி கலெக்டர் மேனகாவிடமும் 9-ந்தேதி நீதிபதி விசாரணை நடத்துகிறார். இவர் தற்போது ஈரோடு மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக பணியாற்றுகிறார்.

இந்த கமிஷனில் மொத்தம் 70 பேர் சாட்சிகளாக விசாரிக்கப்பட உள்ளனர்.

Similar News