செய்திகள்

தமிழக ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை

Published On 2017-01-02 02:56 GMT   |   Update On 2017-01-02 02:56 GMT
பருவமழை பொய்த்ததைத் தொடர்ந்து தமிழக ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் வரை 3 மாதங்கள் பெய்வது வழக்கம். இந்தமழை மூலம் தமிழகத்தின் தண்ணீர் தேவை 70 சதவீதம் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பருவமழை எதிர்பார்த்த அளவு கைகொடுக்கவில்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான 15 அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர்மட்டம் உயரவில்லை.

அதேபோன்று சென்னைக்கு குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் போன்ற ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளிலும் போதிய மழை பெய்யாததால் எதிர்பார்த்த அளவு நீர் மட்டம் உயரவில்லை. வரும் 10 நாட்களுக்கு மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருப்பதால், அணைகளின் நீர் மட்டம் உயரும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

பெரியாறு அணையில் 111.50 அடி தண்ணீர் இருப்பில் உள்ளது. அதேபோல் சாத்தனூர் அணையில் 91.40 அடியும், ஆழியாறு அணையில் 63.05 அடியும் தண்ணீர் இருப்பு உள்ளது.

தென் மாவட்டங்களில் எதிர்பார்த்த அளவு மழை பெய்யவில்லை. இதனால் பேச்சிப்பாறை 8.10 அடியும், பெருஞ்சாணி அணையில் 33.35 அடியும், மணிமுத்தாறு அணையில் 36.59 அடியும், பாபாநாசத்தில் 27.25 அடி தண்ணீரும் உள்ளது.

ஒரு சில அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருவதால் அந்த அணைகளுக்கு குறிப்பிட்ட அளவு தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக திருமூர்த்தி 450 கன அடி, ஆழியாறு 108 கன அடி, பரம்பிக்குளம் 144 கன அடி, பேச்சிப்பாறை 199 கன அடி, பாபநாசம் 141 கன அடி, மேட்டூர் 102 கன அடிவீதம் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.

இருந்தாலும் மேட்டூர், பவானிசாகர், அமராவதி, வைகை, பாபநாசம், மணிமுத்தாறு, பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கிருஷ்ணகிரி, சோலையாறு, பரம்பிக்குளம், திருமூர்த்தி ஆகிய அணைகளில் நீர் மட்டம் 50 அடிக்கும் கீழே தான் உள்ளது. இதன் மூலம் அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு முழுமையாக குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய இயலாது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம் ஆகிய 4 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11 ஆயிரத்து 57 மில்லியன் கன அடியாகும். இந்த ஏரிகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் குறைந்த அளவே மழை பெய்து உள்ளதால் நீர்மட்டம் எதிர்பார்த்த அளவு உயரவில்லை.

இதில் புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. ஏரியில் தற்போது 459 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதம் பெய்த பலத்த மழையால் நீர்வரத்து அதிகரித்து ஏரி கடல்போல் காட்சி அளித்தது. இதனால் கடந்த ஆண்டு சென்னை மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது.

ஆனால் கடந்த ஆண்டு பருவ மழை பொய்த்ததால் நீர் வரத்து குறைத்து, தற்போது ஏரியில் குறைந்த அளவு நீரே இருப்பு உள்ளது. அதிலும் சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஏரியில் இருந்து தினமும் 170 கன அடி நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் புழல் ஏரி வேகமாக வறண்டு வருகிறது.

இதேபோல் 881 மில்லியன் கனஅடி கொண்ட சோழவரம் ஏரியும் வறண்டு வெறும் 81 மில்லியன் கனஅடி தண்ணீர் மட்டும் இருப்பு உள்ளது.

இருந்தாலும் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக கிருஷ்ணா நீர் பெறப்பட்டு வந்தது. தற்போது கிருஷ்ணா நீரையும் ஆந்திர மாநில அரசு நிறுத்தி உள்ளது. கிருஷ்ணா நீரை திறந்து மீண்டும் திறந்து விடக்கோரி தமிழக அதிகாரிகள், ஆந்திர மாநில அரசுக்கு கடிதம் எழுதி உள்ளனர்.

கிருஷ்ணா குடிநீர் வழங்கும் திட்டத்தின் கீழ் கண்டலேறு நீர்தேக்கத்தில் இருந்து திறந்துவிடப்படும் நீர் மூலம் தான் சென்னை குடிநீர் தேவை ஓரளவு சமாளிக்கப்பட்டு வந்தது. தற்போதைய நிலையில் வரும் மாதங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.

சென்னை மாநகரின் நீர்தேக்கங்கள் பெரும்பாலும் அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்யும் வடகிழக்கு பருவமழையையே சார்ந்திருக்கின்றன. இந்த பருவமழை மூலமே சென்னையில் உள்ள நீர்தேக்கங்களில் அதிகமாக நீர் சேகரிக்கப்படுகிறது.

இவ்வாறு சேகரிக்கப்படும் மழை நீரின் காரணமாக சென்னையின் நிலத்தடிநீர் மட்டம் உயர்த்துவதுடன், தண்ணீர் பற்றாக்குறையையும் ஓரளவு போக்க முடியும்.

சென்னை மாநகரில் சராசரி மழையளவு 1 சதுர அடியில் 1 ஆண்டுக்கு கிடைக்கப்பெறும் மழைநீரின் அளவு 113 லிட்டர். இதேபோல் 2 ஆயிரத்து 400 சதுர அடி பரப்பளவுள்ள வீட்டுமனையில் பெய்யும் மழையின் அளவு 2 லட்சத்து 71 ஆயிரத்து 200 லிட்டர். இதில் பூமிக்குள் செலுத்தக்கூடிய மழைநீரின் அளவு 60 சதவீதம். இந்த அளவில் 1 லட்சத்து 62 ஆயிரத்து 720 லிட்டர் மழைநீர் சேகரித்து திரும்ப பூமிக்குள் செலுத்துவதன் மூலம் தண்ணீர் தட்டுப்பாட்டை எளிதில் சமாளிக்க முடியும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதையும் தடுக்கலாம்.

ஆனால் இந்தாண்டு போதிய அளவு வடகிழக்கு பருவ மழை பெய்யாததால், நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க முடியவில்லை. ஏரிகளில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் தண்ணீர் பஞ்சத்தை தவிர்க்க தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேற்கண்ட தகவலை சென்னை குடிநீர் வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News