செய்திகள்

வார்தா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: தமிழக அரசுக்கு மத்திய குழு பாராட்டு

Published On 2016-12-28 20:30 GMT   |   Update On 2016-12-28 20:30 GMT
தமிழக அரசின் முன் எச்சரிக்கை நடவடிக்கையால் வார்தா புயலில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய குழுவினர் பாராட்டினர்.
சென்னை:

திருவள்ளூர் மாவட்டத்தில் பழவேற்காடு ஏரி, பொன்னேரி, சோழவரம் ஆகிய இடங்களில் புயல் சேத பாதிப்புகளை பார்வையிட்டு மாலை 6.30 மணியளவில் 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் சென்னை திரும்பினர்.

முன்னதாக சோழவரத்தில் மத்திய குழுவில் இடம் பெற்றுள்ள மத்திய வேளாண்துறை இயக்குனர் (பொறுப்பு) கே.மனோசரண் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பழவேற்காட்டில் ஏராளமான படகுகள் சேதமடைந்துள்ளது. விளைநிலங்களின் சேதங்களையும் பார்வையிட்டுள்ளோம்.

புயல் சேத விவரங்களை மத்திய வேளாண்மை துறையிடம் தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. நாங்களும் ஆய்வு செய்து, எங்களுடைய ஆய்வறிக்கையை விரைவில் சமர்ப்பிப்போம்.

வார்தா புயலின் போது தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. புயலுக்கு பின்னரும் சீரமைப்பு பணிகளை தமிழக அரசு சிறப்பாக கையாண்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் 230 கோடி ரூபாய்க்கு புயல் சேதம் ஏற்படுத்தி இருப்பதாக மத்திய அரசிடம் மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. ஆனால், திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திடம் விசாரித்தபோது, நாங்கள் எந்த சேத மதிப்பையும் மத்திய குழுவினரிடம் அளிக்கவில்லை என்றனர்.

Similar News