செய்திகள்

தொழில் தொடங்குவதற்காக வங்கியில் கொள்ளையடிக்க முயன்றேன்: கைதான வாலிபர் வாக்குமூலம்

Published On 2016-12-28 10:28 GMT   |   Update On 2016-12-28 10:28 GMT
பொம்மை துப்பாக்கியால் மிரட்டி தொழில் தொடங்குவதற்காக வங்கியில் கொள்ளையடிக்க முயன்றேன் என்று கைதான வாலிபர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
மாதவரம்:

கொளத்தூரை அடுத்த ராஜமங்களம், செங்குன்றம்- வில்லிவாக்கம் சாலையில் ஆந்திரா வங்கி உள்ளது.

நேற்று மாலை வங்கி ஊழியர்களை பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டி பணத்தை கொள்ளையடிக்க முயன்ற அம்பத்தூரை அடுத்த கள்ளிக்குப்பத்தை சேர்ந்த கவுதமை (23), பொது மக்கள் விரட்டி பிடித்தனர்.

அவரை ராஜமங்களம் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது கவுதம் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் 9-ம் வகுப்புவரை படித்துள்ளேன். கம்ப்யூட்டர் டிசைனிங் முடித்து வேலை பார்த்து வந்தேன். இதில் குறைவான வருமானம் கிடைத்தது.

எனவே தனியாக தொழில் தொடங்க முடிவு செய்தேன். இதற்கு ரூ.3 லட்சம் வரை தேவைப்பட்டது. இதையடுத்து வங்கியில் கொள்ளையடிக்க முடிவு செய்தேன்.

ராஜமங்களத்தில் உள்ள ஆந்திரா வங்கியை நோட்டமிட்டு வங்கி ஊழியர்கள் எத்தனை பேர், எப்போது வெளியே செல்வார்கள் என்று கண்காணித்தேன். அவர்களை மிரட்டுவதற்காக பொம்மை துப்பாக்கியை கடையில் வாங்கி வைத்திருந்தேன்.

வங்கிக்குள் சென்றதும் ஊழியர்களை பொம்மை துப்பாக்கியால் மிரட்டி பணம் குறித்து கேட்டேன். இதற்குள் ஊழியர்களின் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் திரண்டதால் தப்பி ஓடினேன்.

ஆனால் எனது சட்டை கலரை வைத்து விரட்டி வந்தனர். உடனே சட்டையை கழற்றி வீசி விட்டு ஒரு வீட்டில் பதுங்கினேன். என்னை அவர்கள் பிடித்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News