செய்திகள்

ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் இப்படி நடந்திருக்குமா?: ராம மோகன ராவ் ஆவேச பேட்டி

Published On 2016-12-27 06:11 GMT   |   Update On 2016-12-27 07:56 GMT
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருந்தால் தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் மத்திய துணை ராணுவப் படை நுழைந்திருக்குமா? என்று பதவிநீக்கம் செய்யப்பட்ட முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை:

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவின் சென்னை அண்ணா நகர் வீட்டில் கடந்த புதன்கிழமை வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அதே சமயத்தில் திருவான்மியூரில் வசிக்கும் அவரது மகன் விவேக் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மேலும் சித்தூர், விஜயவாடா, பெங்களூர் நகரங்களில் உள்ள ராமமோகனராவின் உறவினர்களின் வீடுகளிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினார்கள்.

இந்த சோதனையின்போது ஏராளமான ரொக்கப் பணம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியானது. இதைத் தொடர்ந்து ராமமோகன ராவிடமும், அவரது மகன் விவேக்கிடமும் விசாரணைகள் நடந்து வருவதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையே ராமமோகன ராவ் திடீர் என்று நெஞ்சுவலி ஏற்பட்டு போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவர் வீடு திரும்பினார்.

இந்த நிலையில் இன்று காலை திடீரென அவர் அண்ணா நகர் வீட்டில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

என்னுடைய வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதை கண்டித்து எனக்கு ஆதரவு தெரிவித்து பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தாபானர்ஜி மற்றும் அ.தி.மு.க.வைச் சேர்ந்த எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம், தீரன் ஆகியோருக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். என் வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை தொடர்பாக சில முக்கிய விளக்கங்களையும், தகவல்களையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது வீட்டில் நடத்தப்பட்ட வருமான வரித்துறை சோதனை அரசியல் சட்ட அமைப்புகளுக்கு எதிரானது. இது அரசியல் அமைப்பு மீதான தாக்குதலாகும். அந்த சோதனை நடந்த போது என்னை வீட்டுக் காவலில் வைத்தனர். இது முறையற்ற செயலாகும்.

இதை தடுத்து நிறுத்த தமிழக அரசுக்கு தைரியம் இல்லாமல் போய் விட்டது.

வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாலை 5.30 மணிக்கு எனது வீட்டை சோதனையிட வந்த போது அதற்குரிய சான்று ஆவணத்தை காட்டினார்கள். ஆனால் அந்த சோதனைக்கான பேப்பரில் எனது பெயர் எதுவுமே இல்லை.

எனவே அவர்கள் என் வீட்டில் எப்படி சோதனை நடத்த வந்தனர் என்று தெரியவில்லை. எனது வீட்டில் நடத்தப்பட்ட சோதனை தவறானது. இதை ஏற்க இயலாது. நான் எந்த தவறும் செய்யவில்லை.

தற்போதைய சூழ்நிலையில் இதுவரை அரசு சஸ்பெண்டு உத்தரவை என்னிடம் தரவில்லை. வேறு ஒருவரை நியமனம் செய்ததற்கான கோப்பும் தரப்படவில்லை. எனவே சட்டப்படி நான்தான் தலைமை செயலாளராக நீடிக்கிறேன். என்னை நியமனம் செய்தது முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். அந்த உத்தரவில் மாற்றம் இல்லை.

என் வீட்டில் சோதனை நடந்தபோது அதிகாரிகள் பல கோடி கைப்பற்றப்பட்டதாக சொல்லி உள்ளனர். ஆனால் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 320 ரூபாய் மட்டுமே எடுத்தனர். மேலும் எனது மனைவி மற்றும் மருமகளுக்கு சொந்தமான 42 பவுன் நகையை மட்டுமே எடுத்தனர்.

மேலும் பூஜைக்குரிய விநாயகர், வெங்கடேசர் சிலைகள் மற்றும் 25 கிலோ சில பழைய வெள்ளி பொருட்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். இதுதான் என் வீட்டில் கிடைத்தவை. மற்றபடி பெரிய அளவில் எதையும் அவர்கள் எடுக்கவில்லை.

எனது வீட்டில் ரகசிய அறை இருப்பதாக வருமான வரித்துறையினர் தகவல் பரப்பி உள்ளனர். அப்படி எந்த ரகசிய அறையும் எனது வீட்டில் இல்லை.

எனது மகன் விவேக் இந்த வீட்டில் வசிக்கவில்லை. அவர் தனியாக வசிக்கிறார். எனவே எங்களை சேர்த்து சொல்வது தவறு ஆகும். எனது மகனுக்கும் தமிழக அரசுக்கும் எந்த வர்த்தக தொடர்பும் கிடையாது.

என் மகனுக்கு எதிரான வாரண்டை வைத்து தலைமை செயலகத்துக்குள் சென்று சோதனை நடத்தி இருக்கிறார்கள்.

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா இப்போது உயிருடன் இருந்திருந்தால் மத்திய அரசுக்கு இந்த தைரியம் வந்திருக்காது. தலைமை செயலகத்துக்குள் துணைநிலை ராணுவத்தை அவர்கள் துணிச்சலுடன் அனுப்பி இருப்பார்களா?

மத்திய அரசுக்கு இந்த வி‌ஷயத்தில் எந்த துணிச்சலும் இல்லை. என்னை இடமாற்றம் செய்யும் தைரியம் கூட மத்திய அரசுக்கு கிடையாது.

ஜெயலலிதா மறைவுக்குப் பின் மாநில அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மரியாதை இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப்பின் தமிழகத்திற்கு பாதுகாப்பு இல்லை. யாரும் யாருடைய வீட்டிற்குள்ளும் நுழையலாம் என்ற நிலை உள்ளது.

வருமான வரி சோதனையில் சிக்கிய சேகர் ரெட்டியுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. துப்பாக்கி முனையில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் மிரட்டல் விடுத்தபடி என் வீட்டிற்குள் நுழைந்தனர். இது அனைவருக்கும் தெரியும்.

தலைமை செயலாளராக இருந்த எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. என்னை குறி வைத்து எனக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 7 மாதங்களாக ஜெயலலிதா உத்தரவுப் படிதான் செயல்பட்டு வந்தேன். ஜெயலலிதா வழிக்காட்டுதல் படிதான் நடந்து வந்தேன்.

இவ்வாறு ராமமோகன ராவ் கூறினார்.

Similar News