செய்திகள்

முக்கிய பிரமுகர்களின் வீடுகளில் சோதனை நடத்த வருமானவரி அதிகாரிகள் ஆலோசனை

Published On 2016-12-26 02:34 GMT   |   Update On 2016-12-26 02:34 GMT
ராம மோகனராவின் ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவது பற்றி வருமானவரி அதிகாரிகள் தீவிர ஆலோசனை நடத்தினர்.
சென்னை:

கருப்பு பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு, கணக்கில் காட்டாத பணம், தங்கம் மற்றும் பல ஆயிரம் கோடி மதிப்புள்ள ஆவணங்களை பறிமுதல் செய்வதற்காக, வருமானவரித்துறை மற்றும் அமலாக்கத்துறையினர், தமிழகத்தில் உள்ள உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய புள்ளிகளின் வீடுகளில் கடந்த சில நாட்களாக அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் லட்சக்கணக்கான புதிய மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள், தங்க கட்டிகள் மற்றும் நகைகள், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களையும் பறிமுதல் செய்து உள்ளனர்.

நாட்டையே உலுக்கும் வகையில் தமிழகத்தில் தலைமைச் செயலாளராக இருந்த ராம மோகனராவ் வீட்டில் நடத்திய சோதனையில் பணம், நகை, சொத்து ஆவணங்களுடன், ரகசிய டைரி ஒன்றும் கிடைத்தது. இந்த டைரியில் பல்வேறு முக்கிய புள்ளிகளிடம் அவர் பண பரிமாற்றம் செய்தது தொடர்பான தகவல்கள் வருமான வரித்துறைக்கு கிடைத்து உள்ளது.

இந்த தகவலின் அடிப்படையில் ராம மோகனராவின் வீடு, அவருடைய மகன், உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில் பறிமுதல் செய்யப்பட்ட பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் உயர்மட்ட விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில் அமைச்சர்கள், 12 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மற்றும் ஐ.பி.எஸ்., வனத்துறை உயர் அதிகாரிகள் இவருடன் நடத்திய பணபரிமாற்றம் குறித்து பல்வேறு தகவல்கள் தெரியவந்தது. தற்போது சொத்து ஆவணங்கள் குறித்த முதல் கட்ட விசாரணை மட்டும் நிறைவடைந்து உள்ளது.

தொடர்ந்து அடுத்த கட்ட அதிரடி சோதனையை நடத்த வருமானவரித்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இந்த நிலையில் கிறிஸ்துமஸ் மற்றும் ஞாயிற்றுக் கிழமையான நேற்று விடுமுறை நாளில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள உத்தமர்காந்தி சாலையில் உள்ள வருமானவரி புலனாய்வு பிரிவு அலுவலகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகளுக்கான கூட்டம் நடந்தது.

இதில் வருமானவரித்துறை ஆணையர்கள் மற்றும் வருமானவரித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். முக்கிய பிரமுகர்களின் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்துவது பற்றி தீவிரமாக ஆலோசிக்கப்பட்டது. இந்த கூட்டத்தில் வருமானவரி சோதனையில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு சில விதிமுறைகளும் எடுத்து கூறப்பட்டது.

அப்போது பணம், தங்கம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்வதுடன், ஹாட் டிஸ்க் பறிமுதல் செய்வதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் 80 இந்திய வருவாய் பணிகள் (ஐ.ஆர்.எஸ்.) துறை அதிகாரிகள் உள்ளனர். இவர்களுடன் தெலுங்கானா, ஆந்திரா, கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து 60 ஐ.ஆர்.எஸ். அதிகாரிகள் சென்னைக்கு வந்துள்ளனர். ஆக மொத்தம் 140 அதிகாரிகள் இணைந்து ராம மோகனராவ் வீட்டில் சிக்கிய ரகசிய டைரியில் இடம் பெற்றுள்ள முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த திட்டமிட்டு இருக்கின்றனர்.

இந்த சோதனையில் கணக்கில் காட்டப்படாத பணம், தங்கம் மற்றும் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்ய வாய்ப்பு உள்ளது என்று வருமானவரித்துறையினர் நம்புகின்றனர். இந்த சோதனை நடைபெறும் இடம், தேதி, நேரம் செல்லும் அதிகாரிகள் விவரம் போன்ற தகவல்கள் மிக ரகசியமாக வைக்கப்பட்டு உள்ளது.

ராம மோகனராவ் வீட்டில் சோதனை நடந்தபோது துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதனால் அசம்பாவிதங்கள் எதுவுமின்றி சுமார் 26 மணிநேர சோதனை வெற்றிகரமாக முடிந்தது.

இதேபோல் வரும் நாட்களில் முக்கிய புள்ளிகளின் வீடுகளில் வருமானவரித்துறை சோதனை நடத்தும்போது, எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்க மத்திய அரசின் அனுமதியின் பேரில் கூடுதலாக துணை ராணுவத்தினர் பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றனர்.

இந்தநிலையில் ராம மோகனராவ் மற்றும் அவருடைய மகன் விவேக் ஆகியோரை விசாரணைக்கு வரகோரி சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் ராம மோகனராவ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

அவருடைய மகன் தனது மனைவிக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் விசாரணைக்கு வருவதற்கு கால அவகாசம் வழங்கும்படி வருமானவரித்துறையிடம் கோரியிருந்தார். அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்து இன்று (திங்கட்கிழமை) காலை ஆஜராவார் என்று தெரியவருகிறது.

விவேக்கிடம் நடத்தப்படும் விசாரணைக்காக சொத்து ஆவணங்கள் மற்றும் பணம், தங்கம் சம்பாதித்தது குறித்து ஏராளமான கேள்விகளை வருமானவரித்துறையினர் தயாரித்து வைத்து இருக்கின்றனர்.

இந்த விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறோம் என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News