செய்திகள்

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம்: நெல்லை தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

Published On 2016-12-25 12:34 GMT   |   Update On 2016-12-25 12:34 GMT
இயேசு கிறிஸ்து பிறப்பு நாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. நெல்லை தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

நெல்லை:

இயேசு கிறிஸ்து பிறப்புநாளான கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்தவ மக்கள் வீடுகளை கிறிஸ்துமஸ் ஸ்டார்களால் அலங்கரித்து கிறிஸ்துமஸ் குடில்கள் அமைத்து புத்தாடைகள் அணிந்து குதூகலத்துடன் பண்டிகையை கொண்டாடினர்.

நெல்லை மாவட்டம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று நள்ளிரவு தொடங்கி இன்று அதிகாலை வரை கிறிஸ்து பிறப்பு, கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு, ஜெபம் நடந்தது.

கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்றனர். பாளை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் பி‌ஷப் ஜூடு பால்ராஜ் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. ஆலய பங்குத்தந்தை, உதவி பங்குத்தந்தை உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதுதவிர நெல்லை டவுன் அடைக்கல மாதா அன்னை ஆலயம், பாளை. சீவலப்பேரி ரோடு அந்தோணியார் ஆலயம் , என்.ஜி.ஓ., காலனி சகாயமாதா ஆலயம், மகாராஜநகர் தூய யூதா ததேயு ஆலயம், உடையார்பட்டி திரு இருதய ஆலயம், கே.டி.சி. நகரில் உள்ள வேளாங்கண்ணி மாதா தேவாலயம், பேட்டையில் உள்ள அந்தோணியார் தேவாலயம் உள்பட பல்வேறு தேவாலயங்களில் நேற்று நள்ளிரவில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது.

இந்த ஆராதனைகளில் கிறிஸ்தவர்கள் புத்தாடை அணிந்து குடும்பத்துடன் பங்கேற்றனர். ஆராதனையின் நிறைவில் ஒருவருக்கு ஒருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நெல்லை திருமண்டலத்திற்குட்பட்ட சி.எஸ்.ஐ. தேவாலயமான பாளை. முருகன் குறிச்சி கதீட்ரல் சர்ச்சில் அதிகாலை 4 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை பி‌ஷப் கிறிஸ்துதாஸ் தலைமையில் நடந்தது. கிறிஸ்துமஸ் தேவ செய்திக்குப்பின், திருவிருந்து உபசரனை நடைபெற்றது.

பிரார்த்தனைகளின் முடிவில் அனைவருக்கும் கேக்குகள் வழங்கப்பட்டன. இது தவிர சிந்துபூந்துறை, மிலிட்டரி லைன் உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள சி.எஸ்.ஐ., தேவாலயங்களில் குருவானவர்கள் தலைமையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு மாநகர பகுதிகளில் உள்ள பல்வேறு சர்ச்களில் ஸ்டார்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தன.

வீடுகளிலும், முக்கிய வீதிகளிலும் கிறிஸ்துமஸ் ஸ்டார்கள், குடில்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தன. நெல்லையில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடந்த 67 ஆலயங்கள் முன்பு போலீசார் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டனர்.

Similar News