செய்திகள்

போயஸ் கார்டனில் ஜெயலலிதா வீட்டை படம் எடுக்க அனுமதி மறுப்பு

Published On 2016-12-08 07:05 GMT   |   Update On 2016-12-08 07:06 GMT
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டனில் உள்ள வீட்டை படம் எடுக்க பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா கோட்டைக்கு செல்லும் போதும், பின்னர் அங்கிருந்து வீடு திரும்பும்போதும் அவரை காண்பதற்காக அ.தி.மு.க.வினர் எப்போதும் போயஸ்கார்டன் பகுதியில் காத்திருப்பார்கள்.

இதனால் எப்போதும் போயஸ் கார்டன் பகுதி களை கட்டியிருக்கும். தற்போது ஜெயலலிதா மறைந்ததை அடுத்து போயஸ்கார்டன் பகுதியே சோகத்தில் மூழ்கி இருக்கிறது. வழக்கம்போல் போலீசார் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

மெரீனா கடற்கரையில் ஜெயலலிதாவின் சமாதியை பார்த்து விட்டு வரும் பொதுமக்களும், தொண்டர்களும் போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வாழ்ந்த வீட்டையும் பார்க்க சாரை சாரையாக செல்கிறார்கள்.

ஆனால் ஜெயலலிதா வீட்டுக்கு 500 அடி தூரத்துக்கு முன்பே பாதுகாப்புக்கு நிற்கும் போலீசார் அவர்களை சோதனை செய்தபிறகே வீட்டை பார்த்து வர அனுமதிக்கிறார்கள்.

ஜெயலலிதாவின் வீட்டை யாரும் செல்போனில் படம் எடுக்கக் கூடாது என்பதற்காக செல்போனை போலீசார் வாங்கி வைத்துக் கொள்கின்றனர். வீட்டை பார்த்து விட்டு வந்தபிறகு செல்போனை திருப்பி கொடுக்கின்றனர்.

ஆனால் பத்திரிகையாளர்கள், புகைப்படக்காரர்கள், கேமரா மேன்களுக்கு ஜெயலலிதாவின் வீடு அருகே செல்லவே போலீசார் அனுமதிப்பதில்லை.

இதுபற்றி அங்குள்ளவர்கள் கூறும்போது, ஜெயலலிதா இசட் பிளஸ் பாதுகாப்பில் இருந்தபோதுதான் போயஸ் கார்டனில் பாதுகாப்பு அதிகம் இருந்தது. ஆனால் இப்போதும் அதே ‘கெடுபிடியை’ போலீசார் செய்வது ஏன்? என்று மக்கள் கேள்வி எழுப்பினர்.

Similar News