செய்திகள்

ஜெயலலிதா இறுதி சடங்கு ஏற்பாடு: தமிழக அரசுக்கும், சென்னை போலீசாருக்கும் கவர்னர் பாராட்டு

Published On 2016-12-08 03:02 GMT   |   Update On 2016-12-08 03:02 GMT
மறைந்த தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் இறுதி சடங்கின்போது, முறையாக திட்டமிட்டு அனைத்து ஏற்பாடுகளை செய்த தமிழக அரசு அதிகாரிகளுக்கும், சென்னை போலீசாருக்கும் கவர்னர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
சென்னை:

இதுகுறித்து, தமிழக தலைமை செயலாளர் ராம மோகனராவ், தமிழக டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் ஆகியோருக்கு தமிழக கவர்னர் தனித்தனியாக கடிதம் எழுதியுள்ளார். அதில், கவர்னர் வித்யாசாகர்ராவ் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் மிகவும் புகழ் பெற்ற தலைவரான ஜெயலலிதா மறைந்தார் என்ற செய்தி வெளியானதும், தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களாக ஒரு பதற்றமான சூழ்நிலை நிலவியது. இந்த சூழ்நிலையை கையாள்வது கடினம் என்று எண்ணத் தோன்றியது. ஆனால் தமிழக அரசு எந்திரங்கள் இந்த சூழ்நிலையை சிறப்பாக கையாண்டது என்பதை நினைக்கும் போது உண்மையில் பெருமை கொள்கிறேன்.

ஜெயலலிதாவின் உடலை பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக ராஜாஜி அரங்கத்தில் உடலை வைக்கும் நடவடிக்கை, உடலை ராஜாஜி அரங்கத்தில் இருந்து மெரினா கடற்கரைக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லவும் அரசு அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.

இந்த இறுதி ஊர்வலத்தில் எந்த ஒரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கைகளை தமிழக போலீசார், குறிப்பாக சென்னை போலீசார் மேற்கொண்டனர். இந்த பணிகளுக்காக 2 நாட்கள் போலீசார் கடுமையாக, அயராது உழைத்தனர். இதற்காக அனைத்து போலீசாருக்கும், சென்னை போலீஸ் கமிஷனர் எஸ்.ஜார்ஜூக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதேபோல, ஜெயலலிதாவின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்த ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி, பிரதமர் நரேந்திரமோடி, 9 மாநிலங்களின் முதல்-மந்திரிகள், வெளிநாட்டுகளைச் சேர்ந்த தூதர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கும் சிறந்த ஏற்பாடுகளை பொதுத்துறை முதன்மை செயலாளர் சீரிய முறையில் செய்திருந்தார். இதற்காக அவரையும் பாராட்டுகிறேன்.

இதைவிட எந்த ஒரு சட்ட ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாமல் தமிழக மக்கள் அமைதி காத்தனர். இதன் மூலம் தமிழர்கள் சட்டத்தை மதித்து செயல்பட கூடிய கலாசாரத்தையும், நல்லொழுக்கத்தையும் கொண்டவர்கள் என்பதை இந்த தேசத்துக்கு எடுத்துக்காட்டியுள்ளனர். இதற்காக தமிழக மக்கள் அனைவரையும் பாராட்டுகிறேன்.

இவ்வாறு கவர்னர் கூறியுள்ளார்.

Similar News