செய்திகள்

தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

Published On 2016-12-07 03:01 GMT   |   Update On 2016-12-07 03:01 GMT
கேரளா, லட்சத்தீவு பகுதியில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதால், தமிழக தென் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மண்டல இயக்குநர் எஸ்.ஸ்டெல்லா கூறியதாவது:-

தென்கிழக்கு வங்க கடல் மற்றும் அதையொட்டி உள்ள தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியானது நிலை கொண்டுள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த தாழ்வு மண்டலத்தால் தமிழகத்திற்கு லேசான மழைப்பொழிவே கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதையொட்டி உள்ள கேரளா, லட்சத்தீவு பகுதியில் புதிதாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த சுழற்சியால் தமிழகத்தில் தென் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் ஒரு சில பகுதியில் லேசான மழை பெய்யக்கூடும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News