செய்திகள்

செல்போன் சேவை சில நிமிடங்கள் கட் - பொதுமக்கள் அவதி

Published On 2016-12-05 14:07 GMT   |   Update On 2016-12-05 14:07 GMT
தமிழக முதல்வரின் உடல்நிலை குறித்து தவறான தகவல் வெளியனதை தொடர்ந்து சில நிமிடங்கள் செல்போன் சேவை பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளானார்கள்.
சென்னை:

முதல்வர் ஜெயலலிதா காலமானார் என்று இன்று மாலை 5.30 மணியளவில் தகவல் வெளியானது. இந்த தகவல் சில ஊடகங்களில் வெளியானதால் மக்கள் மத்தியில் பதட்டம் ஏற்பட்டது.

இருப்பினும், ஜெயலலிதா குறித்த தகவல்களை இன்னும் அரசாங்கமோ, அப்போலோ நிர்வாகமோ ஊர்ஜிதப்படுத்தவில்லை என்றும் சில ஊடகங்கள் தொடர்ச்சியாக கூறி வந்தன.

பின்னர் முதல்வரின் உடல்நிலை குறித்து வெளியான தகவல்கள் தவறானவை என்று, அரைமணி நேரத்திற்குள் அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் மறுப்பு செய்தி வெளியிடப்பட்டது. மேலும் முதல்வருக்கு தொடர்ந்து உயர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தது.

இதனிடையே, ஜெயலலிதா காலமானதாக செய்திகள் வெளியான சில நிமிடங்களில் அனைத்து தொலைத் தொடர்பு வசதிகளும் கடுமையாக பாதிக்கப்பட்டது. குறிப்பாக செல்போன் வசதி முடக்கப்பட்ட நிலை ஏற்பட்டது. இது மக்களுக்கு மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியது. வீண் அசம்பாவிதங்களைத் தவிர்க்க, மொபைல் சேவை முடக்கப்பட்டு இருக்கலாம் என செய்திகள் வெளியாகின்றன.

முதல்வரின் உடல்நிலை குறித்த முறையான தகவல் மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழகத்தில் இயல்பு நிலை மீண்டும் திரும்பி வருகிறது. சுமார் ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் செல்போன் வசதி இயல்பு நிலைக்கு திரும்பியது.



Similar News