செய்திகள்

அயனாவரம் மார்க்கெட்டில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளுடன் விரட்டிய ரவுடி கைது

Published On 2016-12-05 08:59 GMT   |   Update On 2016-12-05 09:54 GMT
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அரிவாளுடன் விரட்டிய ரவுடியை போலீசார் கைது செய்தனர். இச்சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வில்லிவாக்கம்:

அயனாவரம், பி.வி.கோவில் தெருவைச் சேர்ந்தவர் விஜி. ரவுடி. இவர் மீது அதே பகுதியைச் சேர்ந்த அறிவழகனை கொலை செய்த வழக்கு உள்ளது.

ஜாமீனில் வெளியே வந்த விஜி எழும்பூர், 5-வது கோர்ட்டில் ஆஜர் ஆகாமல் இருந்தார். அவரை அயனாவரம் போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு அயனாவரம் மார்க்கெட்டில் ரவுடி விஜி, ஐ.சி.எப்.பைச் சேர்ந்த மற்றொரு ரவுடி கருணாவுடன் நிற்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது.

சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் குமார் மற்றும் போலீஸ்காரர்கள் தேவராஜ், பாண்டியன் ஆகியோர் அங்கு சென்றனர். சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் ரவுடிகளை பிடிக்க முயன்றபோது அவர்கள் திடீரென சரமாரியாக தாக்கினர்.

அப்போது ரவுடி கருணா, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ் குமாரை வெட்ட முயன்றார். உஷாரான அவர் தப்பி ஓடினார். இதனால் மார்க்கெட் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீஸ்காரர்கள் பாண்டியன், தேவராஜ் ஆகியோர் ரவுடி கருணாவை பிடிக்க முயன்றனர். இதில் பாண்டியனின் கையில் வெட்டு விழுந்தது. தாக்குதலில் தேவராஜிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீஸ்காரர்கள் பொதுமக்கள் உதவியுடன் ரவுடி கருணாவை மடக்கி பிடித்தனர். அப்போது அங்கு நின்ற ரவுடி விஜி தப்பி ஓடி விட்டார்.

கைதான கருணாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர் மீது ஐ.சி.எப்.பைச் சேர்ந்த ஸ்ரீதரை கொலை செய்த வழக்கு உள்ளது.

தாக்குதலில் காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், போலீஸ்காரர்கள் பாண்டியன், தேவராஜ் ஆகியோருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இச்சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News