செய்திகள்

ஜெயலலிதா நலம் பெற வேண்டும்: ஸ்டாலின் - கனிமொழி அறிக்கை

Published On 2016-12-05 05:57 GMT   |   Update On 2016-12-05 05:57 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளனர்.

சென்னை:

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நலம் சரியில்லாததால் கடந்த 75 நாட்களாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி இருந்து சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று மாலை ஜெயலலிதாவுக்கு திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதால் உடனடியாக தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஜெயலலிதா விரைவில் பூரண நலம்பெற வேண்டும் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறி உள்ளார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் நேற்றிரவு வெளியிட்டுள்ள பதிவில் ஜெயலலிதா பூரண நலம்பெற விழைகிறேன் என்று கூறி உள்ளார்.

இதேபோல் தி.மு.க. பொருளாளர் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரைவில் நலம்பெற வேண்டும் என்று கூறி உள்ளார்.

கனிமொழி எம்.பி. வெளியிட்டுள்ள பதிவில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பூரண நலம் பெற வேண்டும் என்று கூறி உள்ளார்.

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலையில் நேற்று மாலைமுதல் ஏற்பட்ட பின்னடைவு மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது.

தீவிர சிகிச்சைப் பிரிவில் நமது டாக்டர்கள் கண்காணித்து வருவது சற்று ஆறுதலானது என்றாலும் கூட, இவரது உடல்நிலையில் மேலும் முன்னேற்றம் ஏற்பட, இங்கிலாந்து அல்லது மற்ற வெளிநாடுகளுக்கு உடனடியாக அழைத்து செல்லும் வாய்ப்பு பற்றி, அருகிலிருந்து கவனிப்போர், துணிந்து முடிவு எடுப்பது பற்றி அவசரமாக ஆலோசித்து ஆவண மேற்கொள்ள வேண்டும்.

எம்.ஜி.ஆர்.அவர்களை எப்படி மருத்துவ வசதி பெற்ற தனிவிமானம் மூலம் அழைத்துச் சென்று, சிகிச்சை அளித்து குணப்படுத்தியது போல செய்யும் வாய்ப்பு பற்றி பரிசீலித்தல் அவசரம் அவசியம். முதல்-அமைச்சர் விரைவாக உடல்நலம் தேற நமது விழைவுகள்.

இவ்வாறு கூறி உள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்:- தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் நலம் பெற்று மீண்டும் முழு பலத்தோடு பணியை தொடர உள்ளன்போடு என் விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறி உள்ளார்.

Similar News