செய்திகள்

விடுமுறை என்று தவறான தகவல்: பள்ளி-கல்லூரி மாணவ- மாணவிகள் குழப்பம்

Published On 2016-12-05 05:33 GMT   |   Update On 2016-12-05 05:33 GMT
பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை, தேர்வுகள் தள்ளிவைப்பு என்று வெளியான தகவலால் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை:

முதல்-அமைச்சர் உடல் நலம் குறித்த தகவல் வெளியானதையடுத்து பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை, தேர்வுகள் தள்ளிவைப்பு என்று பல்வேறு தகவல்கள் வாட்ஸ்அப்பிலும், தொலைக்காட்சியிலும் வெளியாயின. நள்ளிரவு வரை வெளியான இந்த தகவல் மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மா.பா. பாண்டியராஜன் இந்த தகவலை மறுத்தார். பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படவில்லை. வழக்கம் போல் செயல்படும். தவறான செய்திகளை நம்ப வேண்டாம் என்று அவர் தெரிவித்தார்.

அனைத்து பள்ளிகளும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டாலும் கூட பெற்றோர்கள் மத்தியில் குழப்பம் நிலவியது. காலையில் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதா? வேண்டாமா? பள்ளி வேன், குழந்தைகளை ஏற்றிச் செல்லும் தனியார் வேன்கள் ஓடுமா? என்று ஒவ்வொருவரும் கேட்டனர். அசம்பாவித சம்பவம் எதுவும் நடந்து விடுமோ என்ற அச்சத்தில் சிலர் குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பவில்லை.

ஆனால் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. பெற்றோர் ஆட்டோ மற்றும் இரு சக்கர வாகனங்களில் குழந்தைகளை கொண்டு சென்று விட்டனர்.

இதற்கிடையில் தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேசன் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் மாநில செயலாளர் நந்தகுமார் தனியார் பள்ளிகள் இன்று செயல்படும் என்று தெரிவித்தார். அவர் கூறியதாவது:-

தமிழக முதல்-அமைச்சர் உடல்நலம் பாதிக்கப்பட்டு 2½ மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட தகவல் இரவு வெளியானதையடுத்து தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை எனவும் தகவல் பரவியது. மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவுப்படி பள்ளிகள் இன்று செயல்படும். எனவே பள்ளி வாகனங்களை பாதுகாப்பாக இயக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

முதல்-அமைச்சர் நலம் பெற வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத் தொடர்ந்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் இன்று வழக்கம் போல் செயல்பட்டன. காலை கூடுகையில் முதல்- அமைச்சர் ஜெயலலிதா பூரண குணம் அடைய வேண்டி பள்ளிகளில் மாணவ- மாணவிகள் விசே‌ஷ பிரார்த்தனை செய்தனர்.

Similar News