செய்திகள்

உடல்நிலை சவால்களை சந்தித்து ஜெயலலிதா மீண்டு வருவார்: தமிழிசை நம்பிக்கை

Published On 2016-12-05 04:53 GMT   |   Update On 2016-12-05 04:53 GMT
முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல இக்கட்டான கட்டங்களை கடந்து வந்துள்ளார். இப்போதும் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து மீண்டு வருவார் என தமிழிசை சவுந்தரராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சென்னை:

தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் அரசியல் பயணமாக 5 பேர் குழுவுடன் நேற்று ஜெர்மனி புறப்பட்டார்.

இரவு டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் இருந்தபோது முதல்- அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலை பற்றிய தகவலை அறிந்தார். உடனடியாக தனது பயணத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். அவர் கூறியதாவது:-

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நிலையில் திடீரென்று பின்னடைவு ஏற்பட்டதை அறிந்ததும் அதிர்ச்சி அடைந்தேன். இந்த நேரத்தில் உணர்வுபூர்வமாக வெளிநாடு செல்ல விரும்பாததால் பயணத்தை ரத்து செய்தேன். முதல்வர் குணமடைய பிரார்த்திக்கிறேன். டெல்லி தலைவர்களும் பிரார்த்திக்கிறார்கள்.

இதயத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சரி செய்ய ஆஞ்ஜியோ செய்துள்ளார்கள். மிகவும் பின்னடைவான கால கட்டங்களில் அவசர கால சிகிச்சைகள் பலன் அளித்துள்ளதை மருத்துவ துறையில் பார்த்து இருக்கிறேன்.

முதல்-அமைச்சர் ஜெயலலிதா பல இக்கட்டான கட்டங்களை கடந்து வந்துள்ளார். இப்போதும் உடல் நிலையில் ஏற்பட்டுள்ள சவால்களை சந்தித்து மீண்டு வருவார்.

நம்பிக்கையோடு அவசர கால சிகிச்சைகளை எதிர் கொண்ட பலர் மீண்டு இருக்கிறார்கள். அதே போல் விரைவில் அவர் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

இந்த நேரத்தில் அ.தி.மு.க. தொண்டர்களும் தன்னம்பிக்கையோடு தங்கள் பிரார்த்தனையை தொடர வேண்டும். எந்த விதத்திலும் தொண்டர்கள் உணர்ச்சி வசப்படக் கூடாது என்பதே எனது வேண்டுகோள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Similar News