செய்திகள்

கோ.சி.மணி மறைவு: தலைவர்கள் இரங்கல்

Published On 2016-12-03 09:25 GMT   |   Update On 2016-12-03 09:25 GMT
தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை:

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி மறைவுக்கு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-

திராவிட இயக்கங்களின் முன்னோடிகளில் ஒருவரும், தி.மு.க.வின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகுந்த மனவருத்தம் அடைகிறேன்.

கோ.சி.மணி தி.மு.க. தலைவர் கலைஞரின் நம்பிக்கைக்குரிய தளபதியாகவும், தென் மாவட்ட மக்களின் மரியாதைக்கும், அன்புக்கும் பாத்திரமானவராகவும் விளங்கியவர். ஓய்வறியா உழைப்பாளியான இவர் தி.மு.க.வின் வளர்ச்சிக்கு பம்பரமாக சுழன்று பணியாற்றியவர். எல்லோருடனும் அன்புடன் பழகக் கூடியவர். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்:-

தி.மு.க. முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்தினேன். இவர் தான் சார்ந்த கட்சியில் படிப்படியாக உயர்ந்து, உயர்மட்ட பதவிகள் வரை பல்வேறு பொறுப்புகளில் திறம்பட பணியாற்றியவர்.

மக்கள் நலனுக்காக பல்வேறு ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் போன்றவற்றில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர். தமிழக சட்டப்பேரவை உறுப்பினராக, சட்டமேலவை உறுப்பினராக, சட்ட மேலவையில் எதிர்கட்சித் துணைத் தலைவராக, அமைச்சராக பணியாற்றி தனது தொகுதிக்கும், தமிழக வளர்ச்சிக்கும் பங்காற்றிய பெருமை இவருக்கு உண்டு.

அத்தகைய பேரும், புகழும் கொண்ட கோ.சி.மணி அவர்களின் மறைவு என்பது அவரது குடும்பத்திற்கும், அவர் சார்ந்த கட்சிக்கும் பேரிழப்பாகும்.

பா.ம.க. நிறுவன தலைவர் டாக்டர் ராமதாஸ்:-

ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் மேக்கிரிமங்கலம் கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த கோ.சி.மணி இளம் வயதிலேயே அரசியலில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டார். தந்தை பெரியார் மற்றும் அறிஞர் அண்ணாவை தமது அரசியல் வழிகாட்டிகளாக ஏற்றுக் கொண்ட கோ.சி.மணி கடைசி வரை அரசியல் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.

கும்பகோணம் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு 4 முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 3 முறை அமைச்சராகவும், இரு முறை சட்ட மேலவை உறுப்பினராகவும் பதவி வகித்தவர். உள்ளாட்சித் துறை அமைச்சராக இவர் பதவி வகித்த காலத்தில் தான் உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சிக்காக சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன.

இவரது காலத்தில் தான் கும்பகோணம் நகரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, நகரம் அழகுபடுத்தப்பட்டது. உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

இத்தகைய சிறப்புகளை கொண்ட கோ.சி.மணியின் மறைவு தி.மு.க.வுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். அவரை இழந்து வாடும் தி.மு.க.வினருக்கும், குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்திய கம்யூனிஸ்டு செயலாளர் முத்தரசன்:-

கோ.சி.மணி தஞ்சை மாவட்ட விவசாயிகளின் போராட்டங்களில் முன்னணியில் இருந்தவர். இடதுசாரி கட்சிகளின் பல்வேறு போராட்டங்களில் அவரது இயக்கத்தின் சார்பில் பங்கேற்றவர்.

தந்தை பெரியாரின் கருத்துக்களிலும், திராவிட இயக்கத்தின் கொள்கைகளிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். தி.மு.க. தலைவர் கருணாநிதியோடு நெருக்கமாக, நம்பிக்கைக்குரியவராக இருந்தவர். அவரது மறைவு தி.மு.க.விற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், தி.மு.க.விற்கும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News