செய்திகள்

சென்னையில் காற்றுடன் பலத்த மழை: 10 இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன

Published On 2016-12-03 05:05 GMT   |   Update On 2016-12-03 05:05 GMT
சென்னையில் நேற்று மாலை முதல் இரவு வரை காற்றுடன் பலத்த மழை பெய்ததால் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.
சென்னை:

வங்ககடலில் உருவான நடா புயல் காரணமாக 2 நாட்களாக சென்னையில் மிதமான மழை பெய்தது.

புயல் வலுவிழந்து கரையை கடந்த போதிலும் மேக கூட்டம் திரள்வதால் அவ்வப்போது மழை பெய்கிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கிடக்கிறது.

நேற்று மாலை 4 மணியில் இருந்து மழை விட்டு விட்டு பெய்தது. இரவிலும் மழை நீடித்தது.

பாரிமுனை, கோயம்பேடு, அம்பத்தூர், அண்ணாநகர், ஆவடி, திருமுல்லைவாயல், புழல், புதூர், செங்குன்றம், மாதவரம், வியாசர்பாடி, கீழ்ப்பாக்கம், மயிலாப்பூர், அடையார், கிண்டி, பல்லாவரம், குரோம்பேட்டை, தாம்பரம், கூடுவாஞ்சேரி உள்பட பல பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால் ரோடுகளில் ஆங்காங்கே மழை நீர் தேங்கிக்கிடக்கிறது.



காற்றுடன் மழை பெய்ததால் கீழ்ப்பாக்கத்தில் டெய்லர்ஸ் ரோடு, ஹாரிங்டன் ரோடு, அப்பல்லோ ஆஸ்பத்திரி கிரீம்ஸ் சாலை, முகப்பேர் ஏரித்திட்டபகுதி, முகப்பேர் மேற்கு, அம்பத்தூர், கோயம்பேடு, வடபழனி, கிண்டி, எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளில் மரங்கள் விழுந்தன.

இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. தீயணைப்பு படைக்கு புகார் வந்ததும் விரைந்து சென்று விழுந்து கிடந்த மரங்களை அப்புறப்படுத்தினார்கள்.

இன்று காலை 6 மணியில் இருந்து 8.30 மணி வரை விட்டு விட்டு மழை பெய்ததால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் பெரிதும் சிரமப்பட்டனர்.



இலங்கைக்கு தெற்கே புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் இன்னும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

Similar News