செய்திகள்

மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டிகள் உள்பட 4 மாடுகள் பலி

Published On 2016-12-03 03:10 GMT   |   Update On 2016-12-03 03:10 GMT
ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டிகள் உள்பட 4 மாடுகள் இறந்தன. மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
ஆவடி:

ஆவடி அருகே மின்சாரம் தாக்கி கன்றுக்குட்டிகள் உள்பட 4 மாடுகள் இறந்தன. மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

ஆவடியை அடுத்த சேக்காடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் செல்வி (வயது 45). அதே பகுதி பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் கிரிஜா (48). இவர்கள் இருவரது பசு மாடுகள் நேற்று முன்தினம் மேய்ச்சலுக்கு சென்றன. ஆனால் இரவு மாடுகள் அவர்களது வீட்டுக்கு செல்லவில்லை.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால், அவர்கள் இருவரும் மாடுகளை தேடவில்லை. இதையடுத்து நேற்று காலை செல்வி மற்றும் கிரிஜா ஆகியோர் அப்பகுதியில் மாடுகளை தேடிச்சென்றனர்.

இந்த நிலையில், சேக்காடு பெருமாள் கோவில் தெருவில் இருந்த இரும்பு மின்சார கம்பம் அருகே 2 மாடுகள் மற்றும் 2 கன்றுகுட்டிகள் இறந்து கிடப்பது தெரியவந்தது. மேலும், மழை பெய்ததால் மின் கசிவு ஏற்பட்டு மின்கம்பத்தில் மின்சாரம் பாய்ந்து உள்ளது. எதிர்பாராதவிதமாக, அந்த மின் கம்பத்தின் மீது மாடுகள் உரசியதால் அவை இறந்தது தெரிந்தது.

மாடுகள் மின்சாரம் தாக்கி இறந்ததால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. நல்ல வேளையாக பொதுமக்கள் யாரும் செல்லவில்லை. அப்படி யாராவது சென்றிருந்தால் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆவடி போலீசார் விசாரித்து வருகின்றனர். 

Similar News