செய்திகள்

ஆம்பூர்-ஆற்காட்டு விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் பலி

Published On 2016-11-29 10:07 GMT   |   Update On 2016-11-29 10:07 GMT
ஆம்பூர்-ஆற்காட்டில் நடந்த விபத்தில் வாலிபர் உள்பட 3 பேர் பலியாயினர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆம்பூர்:

குடியாத்தம் தாலுகா வேலம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகன் வாணிஷ் (வயது 29). இவர், இன்று அதிகாலை 3.30 மணிக்கு ஆம்பூர் அடுத்த மாதனூர் பாலாற்றில் இருந்து மாட்டு வண்டியில் மணல் கடத்தினார்.

மாட்டு வண்டியை ஓட்டிக் கொண்டு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது வேலூரில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற லாரி எதிர்பாராத விதமாக மாட்டு வண்டி மீது மோதியது.இந்த விபத்தில் மணல் கடத்திய வாலிபர் வாணிஷ் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். ஆம்பூர் தாலுகா போலீசார் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆம்பூர் அடுத்த மின்னூர் ரெயில்வே ரோடு பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (வயது 65). விவசாயி. இவர் நேற்றிரவு 6.30 மணிக்கு சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார்.

அப்போது, வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி சென்ற பைக் விஸ்வநாதன் மீது மோதியது. இதில் விஸ்வநாதனும், பைக்கை ஓட்டி  வந்த ஆம்பூர் இந்திரா நகரை சேர்ந்த திருக்குமரன் (22) என்ற வாலிபரும் பலத்த காயமடைந்தனர்.

சிகிச்சைக்காக வேலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட விஸ்வநாதன் சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார்.

இதுகுறித்தும் ஆம்பூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆற்காடு அடுத்த திமிரி வரகூர் பிராமணர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 42). ஆரணி அடுத்த பூச்சிமலை குப்பம் முருகன் கோவில் பூசாரி. இவர், கடந்த 19-ந் தேதி வரகூரில் இருந்து வரகூர் பட்டினம் பகுதிக்கு பைக்கில் சென்றார்.

மீண்டும் வீடு திரும்பிய போது, பைக்கில் இருந்து சிவக்குமார் தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிவக்குமார், ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு இறந்தார். விபத்து குறித்து திமிரி போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News