செய்திகள்

கயத்தாறு அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை

Published On 2016-11-29 04:53 GMT   |   Update On 2016-11-29 04:53 GMT
கயத்தாறு அருகே பயிர்கள் கருகியதால் விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கயத்தாறு:

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 31). ஆட்டோ டிரைவரான இவர் விவசாயமும் செய்து வந்தார். அதே பகுதியில் தனது 8 ஏக்கர் தோட்டத்தில் உளுந்து, மக்காச்சோளம், பாசி பயிர் ஆகியவற்றை பயிரிட்டிருந்தார். இதற்கு செலவுக்காக தனது மனைவியின் நகையை அப்பகுதியில் உள்ள கூட்டுறவு வங்கியில் அடகு வைத்திருந்தார்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடப்பாண்டில் பருவ மழை பெய்யாததால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக முருகன் பயிரிட்டிருந்த பயிர்கள் முழுவதுமாக தற்போது கருகி விட்டது. நேற்று மாலை தோட்டத்திற்கு சென்ற முருகன் வறட்சி மற்றும் கடும் பனி காரணமாக பயிர்கள் கருகி கிடப்பதை பார்த்த அவர் வாழ்க்கையில் வெறுப்படைந்தார்.

மேலும் விவசாய செலவுக்காக கூட்டுறவு வங்கியில் வைத்த மனைவியின் நகையை திருப்பமுடியாமல் போய் விட்டதே என மனமுடைந்த முருகன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வி‌ஷம் குடித்தார்.

உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் நேற்று இரவு முருகன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இச்சம்பவம் குறித்து கயத்தாறு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்கொலை செய்து கொண்ட முருகனுக்கு தம்புராட்டி என்ற மனைவியும், 2 மகள்களும், 1 மகனும் உள்ளனர்.

Similar News