செய்திகள்

ஜல்லிக்கட்டுக்கு தடையை நீக்கக் கோரி கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்

Published On 2016-11-28 11:27 GMT   |   Update On 2016-11-28 11:27 GMT
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு வீரவிளையாட்டு கூட்டமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் இன்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தமிழகத்தில் பாரம்பரியமான வீர விளையாட்டுகளாக ஜல்லிக்கட்டு, ரேக்ளா, மாட்டு வண்டி பந்தையம் நடத்தப்பட்டு வருகிறது.

உச்ச நீதிமன்ற தடையால் கடந்த 3 வருடமாக இந்த போட்டிகள் நடத்தப்படாமல் உள்ளது. இதன் காரணமாக கிராமங்களில் தெய்வ வழிபாடுகள் முற்றிலும் தடைபட்டுள்ளது. எனவேதான் மக்களுக்கு பலவித நோய்கள் ஏற்பட்டு மழை வளமும் குறைந்து வருகிறது.

நமது நாட்டில் உள்ள காளை இனங்களை அழிக்கும் நோக்கில் பிராணிகள் நலவாரியம், பீட்டா அமைப்பு போன்ற இயக்கங்களுக்கு பொருளுதவி அளித்து காளைகளை முற்றிலும் அழித்து வருகின்றனர். இதனால் ஜெர்சி மாடுகள் பாலை அருந்துவதால் சர்க்கரை நோய் மக்களுக்கு பரவுகின்றது. நாட்டு மாட்டின் பால் தரமானதாகவும், சுகாதாரமானதாகவும் இருக்கும். காளை மாடுகள் இல்லாமல் உழவு தொழில் செய்ய முடியாது.

தெய்வமாக வழிபட்டு வரும் ஜல்லிக்கட்டு வீர விளையாட்டை இந்த வருடம் நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது நடைபெறும் குளிர்கால கூட்டத் தொடரில் சட்டமசோதா தாக்கல் செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

முன்னதாக அந்த அமைப்பைச் சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் காளை வளர்ப்போர் ஆகியோர் ஊர்வலமாக வந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Similar News