செய்திகள்

முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2016-11-26 13:35 GMT   |   Update On 2016-11-26 13:35 GMT
முகவரி கேட்பதுபோல் நடித்து மூதாட்டியிடம் நகையை பறித்து சென்ற வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

மதுரை:

மதுரை சதாசிவ நகரைச் சேர்ந்தவர் சுதர்சனம் (வயது70). இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் வந்தார்.

அவர் மூதாட்டி சுதர்சனத்திடம் ஒரு துண்டு சீட்டை காட்டி அதில் உள்ள முகவரி குறித்து விசாரித்தார். அந்த பேப்பரை சுதர்சனம் வாங்கி பார்த்தார். அப்போது அந்த வாலிபர் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் நகையை பறித்துக்கொண்டு ஓடினான்.

இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த சுதர்சனம், திருடன்... திருடன்.. என கூச்சலிட்டார். இதனை கேட்ட அக்கம் பக்கத்தினர் திரண்டு அந்த வாலிபரை துரத்தி சென்றனர். அப்போது மற்றொரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் தயாராக நின்று கொண்டிருந்தார். அதில் ஏறி நகை பறித்த ஆசாமி தப்பி சென்று விட்டான்.

இதுகுறித்து அண்ணா நகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

செல்லூர் மேலதோப்பு பகுதியைச் சேர்ந்தவர் லோகமணி (30). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்று இருந்தார். இதனை பயன்படுத்தி யாரோ மர்ம மனிதர்கள் அங்கு புகுந்து உள்ளனர்.

இந்த நிலையில் லோகமணி வீட்டின் கதவு திறந்து கிடப்பதை அக்கம் பக்கத்தினர் பார்த்து தகவல் கொடுத்தனர். அதன்பேரில் லோகமணி குடும்பத்தினர் விரைந்து வந்து பார்த்தபோது பின் பக்க கதவை உடைத்து கொள்ளையர்கள் புகுந்து இருப்பது தெரியவந்தது.

அவர்கள் வீட்டில் இருந்த 11 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றுள்ளதாக செல்லூர் போலீசில் லோகமணி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடியதாக அதே பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவரை கைது செய்தனர்.

Similar News