செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று அநேக இடங்களில் மழை பெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு

Published On 2016-11-03 01:57 GMT   |   Update On 2016-11-03 01:57 GMT
அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று மண்டலமாகிறது. வடகிழக்கு பருவமழை காரணமாக இன்று தமிழ்நாட்டில் அநேக இடங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. அந்தமான் அருகே நேற்று முன்தினம் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது. அது வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி உள்ளது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக பொன்னேரியில் 8 செ.மீ. மழையும், சாத்தான்குளத்தில் 6 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறி உள்ளது. அது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாறுகிறது. அது வடமேற்கு திசையில் நகர்ந்து வடமேற்கு வங்க கடலில் இருக்கும்.

வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று (வியாழக்கிழமை) அநேக இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும். அதாவது தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் மாவட்டங்களில் சில இடங்களிலும் மழை பெய்யும்.

சென்னையில் சில இடங்களில் விட்டு விட்டு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். ஏற்கனவே தமிழகம் மற்றும் கேரளாவையொட்டி காற்று மண்டலத்தில் உருவான சுழற்சி வலுவிழந்து மறைந்துவிட்டது.

இவ்வாறு இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்தார்.

சென்னையில் நேற்று சில இடங்களில் லேசான மழை பெய்தது.

Similar News